விருத்தாசலம் அருகே பா.ம.க. பிரமுகர் அடித்துக்கொலை - தந்தை, மகன் கைது

விருத்தாசலம் அருகே நிலத்தகராறில் பா.ம.க. பிரமுகரை அடித்துக் கொலை செய்த தந்தை-மகனை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

Update: 2020-10-10 22:15 GMT
பெண்ணாடம்,

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த வெண்கரும்பூர் கிராமத்தை சேர்ந்த பச்சமுத்து மகன்கள் ராஜவேல் (வயது 65), கோவிந்தசாமி(60), அர்ஜூனன்(55). இவர்களில் அர்ஜூனன் பா.ம.க.வின் தமிழர் உழவர் பேரியக்க கடலூர் மாவட்ட துணை செயலாளராக இருந்து வந்தார். இவருக்கு திருமணமான சில நாட்களிலேயே, மனைவி பிரிந்து சென்றுவிட்டார். இதன் காரணமாக அர்ஜூனன் தனியாக வசித்து வந்தார்.

இந்த நிலையில் ராஜவேல் மற்றும் அவரது மகன் அண்ணாதுரை(42) ஆகியோர் அர்ஜூனனிடம் உனக்கு குழந்தைகள் இல்லை. எனவே உனக்கு சொந்தமான 2½ ஏக்கர் நிலத்தை எங்களுக்கு எழுதி கொடு என்று கேட்டு அடிக்கடி அர்ஜூனனிடம் தகராறு செய்து வந்துள்ளனர். இதன் காரணமாக நேற்று முன்தினமும் அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ராஜவேல், அண்ணாதுரை ஆகியோர் அர்ஜூனனை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்த தகவலின் பேரில் பெண்ணாடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருபாலட்சுமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அர்ஜூனனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கோவிந்தசாமி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து ராஜவேல், அண்ணாதுரை ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்