கள்ளக்காதல் விவகாரத்தில் தலையிட்டதால் ஆத்திரம்: மதுரையில் வக்கீல் அடித்துக் கொலை - நண்பர் கைது

மதுரையில் கள்ளக்காதல் விவகாரத்தில் தலையிட்ட வக்கீலை அடித்துக்கொன்ற அவரது நண்பரை போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பாக 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2020-10-10 22:15 GMT
நாகமலை புதுக்கோட்டை,

மதுரை நாகமலைபுதுக்கோட்டையை அடுத்த துவரிமான் இந்திராகாலனி அருகே வைகை ஆற்றின் கரையில் நேற்று முன்தினம் இரவு ஒரு ஆண் பிணம் கிடந்தது. இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த நாகமலைபுதுக்கோட்டை போலீசார் பிணத்தை கைப்பற்றி மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார் என்பது குறித்த போலீசார் விசாரித்தபோது அவர், சிவகங்கை மாவட்டம் மானாமதுரை கீழரத வீதியை சேர்ந்த சுந்தர்ராஜன் மகன் சாக்ரடீஸ் என்ற தேவா என்பது தெரியவந்தது.

வக்கீலான அவர் திருச்சியில் மசாஜ் சென்டர் நடத்தி வந்துள்ளார். இவர் மீது கொலை வழக்கு உள்பட 4 வழக்குகள் நிலுவையில் உள்ளன. வழக்கு ஒன்றில் நீதிமன்றத்தில் ஆஜராவதற்கு சாக்ரடீஸ் மதுரை வந்துள்ளார்.

இந்த நிலையில்தான், மதுரை காளவாசல் சொக்கலிங்கநகரை சேர்ந்த நண்பரான செந்தில்குமார் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து சாக்ரடீசை அடித்துக்கொன்றதும், பின்னர் பிணத்தை துவரிமான் வைகை ஆற்றின் கரையோரத்தில் வீசிச் சென்றதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் செந்தில்குமாரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் செந்தில்குமார் மனைவி ரம்யா மதுரையில் மசாஜ் சென்டர் நடத்தி வந்துள்ளார். அவருக்கு அருப்புக்கோட்டை பகுதியில் மசாஜ் சென்டர் நடத்தி வந்த ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு, அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

இதில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக ரம்யா, செந்தில்குமாரை விட்டு பிரிந்து சென்று விட்டார். அப்போது இந்த விவகாரத்தில் சாக்ரடீஸ் தலையிட்டதாக கூறப்படுகிறது. தனது மனைவி பிரிந்து சென்றதற்கு சாக்ரடீஸ்தான் காரணம் என்ற எண்ணத்தில் செந்தில்குமார் இருந்து வந்துள்ளார்.

எனவே கோர்ட்டில் ஆஜராவதற்காக மதுரை வந்த சாக்ரடீசை, செந்தில்குமார் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து கொலை செய்து, ஆட்டோவில் கொண்டு சென்று துவரிமான் பகுதியில் பிணத்தை வீசி சென்றுள்ளனர். இந்த கொலையில் தொடர்புடைய செந்தில்குமாரின் நண்பர்களை போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்