மதுரையில் பட்டப்பகலில் பயங்கரம்: பாண்டிகோவில் வளாகத்தில் ஓட, ஓட விரட்டி வாலிபர் படுகொலை - 5 பேர் கும்பல் வெறிச்செயல்
மதுரையில் பிரபலமான பாண்டி கோவில் வளாகத்திற்குள் ஓட, ஓட விரட்டி வாலிபர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட 5 பேர் கும்பலை போலீசார் தீவிரமாக தேடிவருகிறார்கள். இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
மதுரை,
மதுரை கல்மேடு, ஆண்டார் கொட்டாரம் பகுதியை சேர்ந்தவர் முத்துராஜா (வயது 35). இவர் மதுரையில் முக்கிய கோவில்களில் ஒன்றான பாண்டி முனீசுவரர் கோவில் வளாகத்தில் உள்ள ஒரு கோவிலில் பூஜை பணிகளுக்கு உதவியாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
பாண்டிகோவில் என பக்தர்களால் அழைக்கப்படும் இந்த கோவிலுக்கு மதுரை மட்டுமில்லாமல் தென் தமிழகம் முழுவதும் இருந்தும் பக்தர்கள் அதிக அளவில் வந்து நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம்.
நேற்று மதியம் கோவிலில் பூஜைகள் முடிந்த பின்பு முத்துராஜா அங்கு நின்று கொண்டிருந்தார். அப்போது பயங்கர ஆயுதங்களுடன் 5 பேர் கும்பல் அங்கு வந்தது. அந்த கும்பலை கண்டதும் அவர் தப்பி ஓடினார்.
உடனே அந்த கும்பலை சேர்ந்தவர்கள் பாண்டிகோவில் வளாகத்திற்குள் அவரை ஓட, ஓட விரட்டி சென்று சரமாரியாக வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே முத்துராஜா பரிதாபமாக இறந்தார். பின்னர் அந்த 5 பேரும் தப்பி ஓடிவிட்டனர்.
இதை அறிந்ததும் கோவிலுக்கு வந்த பக்தர்கள் மற்றும் அந்த பகுதியில் கடைகள் நடத்தி வருகிறவர்கள் அதிர்ச்சி அடைந்து ஓட்டம் பிடித்தனர்.
இதுகுறித்த தகவல் அறிந்து அண்ணாநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் முத்துராஜாவின் உடலை பரிசோதனைக்காக மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கொலைக்கான பின்னணி என்ன? என்பதை அறிய போலீசார் விசாரணையை தொடங்கினர். மேலும் போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையிலும் விசாரித்தனர்.
அப்போது, “கடந்த ஆண்டு நடந்த ஒரு விழாவில் முத்துராஜா தன் உறவினர்களோடு கலந்து கொண்டுள்ளார். அந்த விழாவில் அவருக்கும், கருப்பாயூரணியை சேர்ந்த ஒருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அது கைகலப்பாக மாறி பெரிய அளவில் மோதலாக உருவானது. இது குறித்து அண்ணாநகர் போலீஸ் நிலையத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. அதன் பின்பும் அந்த வழக்கில் சம்பந்தப்பட்டவருக்கும், முத்துராஜாவிற்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. எனவே இதுதொடர்பான முன்விரோதத்தில் முத்தராஜா கொலை செய்யப்பட்டு இருக்கலாம்” என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
எனவே தப்பி ஓடிய 5 பேரை போலீசார் அந்த பகுதி முழுவதும் தேடினார்கள். மதுரையில் இருந்து தென் தமிழகம் செல்லும் ரிங்ரோட்டில் பிரதான இடத்தில் பாண்டி முனீசுவரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு அருகேதான் மாட்டுத்தாவணி பஸ்நிலையம், மருத்துவமனைகள், தொழில்நுட்ப பூங்கா வளாகம் உள்ளிட்டவையும் உள்ளன. எனவே கோவில் பகுதியில் மக்கள் கூட்டம் எப்போதும் அதிகமாக காணப்படும்.அப்படிப்பட்ட இடத்தில் உள்ள பாண்டி கோவில் வளாகத்தில் நடந்த இந்த படுகொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கொலையாளிகளை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையும் நடந்து வருகிறது.