வெப்படை பகுதியில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 7 பேர் கைது
வெப்படை பகுதியில் இருவேறு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 7 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டம் வெப்படை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட ரங்கனூர் பகுதியை சேர்ந்தவர் பழனியப்பன். விவசாயி. இவரது மனைவி லட்சுமி. கடந்த 5-ந் தேதி வீட்டில் டி.வி. பார்த்துக் கொண்டிருந்தபோது, திடீரென சில நபர்கள் வீட்டிற்குள் நுழைந்து வயதான இந்த தம்பதியினரை தாக்கி, கட்டிப்போட்டு விட்டு கத்தி முனையில் பீரோவின் சாவியை பிடுங்கி, பீரோவில் இருந்த ரூ.92 ஆயிரத்தை கொள்ளை அடித்து சென்று விட்டனர்.
இதேபோல் எலந்தகுட்டை காமராஜர் நகரை சேர்ந்த நபரை 3 பேர் கட்டையால் தாக்கி, அவரிடம் இருந்து மோட்டார்சைக்கிள் மற்றும் ரூ.12 ஆயிரத்தை பறித்து சென்றனர். இந்த இரு கொள்ளை சம்பவங்கள் தொடர்பாக வெப்படை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வந்தனர்.
மேலும் கொள்ளையர்களை கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் உத்தரவின்பேரில் பள்ளிபாளையம் இன்ஸ்பெக்டர் சாந்தமூர்த்தி, வெப்படை சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் வெப்படை 4 ரோடு அருகே வாகன சோதனை செய்து கொண்டிருந்தபோது 2 மோட்டார்சைக்கிள்களில் வந்த 4 பேர் போலீசாரை கண்டதும் திருப்பிக்கொண்டு போக முயற்சி செய்தனர்.
அவர்களை சுற்றி வளைத்து பிடித்த போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் ஐந்துபனை பகுதியை சேர்ந்த சசிகுமார் (வயது 22), எலந்தகுட்டை ஹரி நித்தீஷ் (19), அய்யப்பன் (19), பெங்களூரு தமிழரசு (20), ஐந்துபனை கவின் (21), காந்திநகர் ஹரிதாஸ் (23), பாதரை ஆனந்த் (19) என்பது தெரியவந்தது.
இவர்களில் சசிகுமார், ஹரிநித்தீஸ், ஆனந்த் மற்றும் கவின் ஆகிய 4 பேரும் வயதான தம்பதியினரிடம் கத்தி முனையில் ரூ.92 ஆயிரத்தை கொள்ளை அடித்து சென்றதும், மீதமுள்ள 3 பேரும் காமராஜர் நகரை சேர்ந்த நபரிடம் ரூ.12 ஆயிரத்தை பறித்து சென்று இருப்பதும் தெரியவந்தது.
இருவேறு இடங்களில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 7 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள், வெள்ளி அரைஞாண் கயிறு மற்றும் ரூ.11 ஆயிரத்தை மீட்டனர். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.