டி.ஆர்.பி. ரேட்டிங் மோசடி வழக்கு: பிரபல டி.வி. சேனல் அதிகாரி விசாரணைக்கு ஆஜராக மறுப்பு
டி.ஆர்.பி. ரேட்டிங் மோசடி வழக்கில் பிரபல டி.வி. சேனல் அதிகாரி போலீசாரின் விசாரணைக்கு ஆஜராக மறுத்து உள்ளார்.
மும்பை,
டி.வி. சேனல்களில் ஒளிப்பரப்பாகும் நிகழ்ச்சிகளை பார்க்கும் பார்வையாளர்களின் எண்ணிக்கையை வைத்து டி.ஆர்.பி. ரேட்டிங் கணக்கிடப்படுகிறது. இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் மும்பை போலீசார் டி.ஆர்.பி. ரேட்டிங் மோசடியில் ஈடுபட்ட பக்த் மராத்தி, பாக்ஸ் சினிமா சேனல் உரிமையாளர்கள் உள்பட 4 பேரை கைது செய்து இருந்தனர்.
மேலும் இந்த மோசடியில் பிரபல ஆங்கில செய்தி சேனல் ரிபப்ளிக்கும் ஈடுபட்டுள்ளதாக மும்பை போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங் கூறியிருந்தார். பார்வையாளர்கள் பார்க்காவிட்டாலும் அவர்களுக்கு பணம் கொடுத்து டி.வி.யில் தங்களது சேனல்களை வைக்குமாறு கூறி இந்த மோசடி நடந்ததாக கூறப்பட்டது.
இதுதொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு ரிபப்ளிக் சேனல் தலைமை நிதி அதிகாரி சிவ சுப்ரமணியம் சுந்தரத்திற்கு போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். ஆனால் அவர் போலீசார் சம்மனில் கூறியிருந்தபடி நேற்று காலை 11 மணி விசாரணைக்கு ஆஜராகவில்லை.
எனினும் அவர் போலீசாருக்கு தகவல் ஒன்றை அனுப்பி இருந்தார். அதில் டி.ஆர்.பி. ரேட்டிங் மோசடி வழக்குக்கு எதிராக ரிபப்ளிக் சேனல் சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டுள்ளதாகவும், அந்த மனுமீதான விசாரணை ஒருவாரத்தில் நடக்க உள்ளதால் போலீசாரின் விசாரணைக்கு ஆஜராகவில்லை எனவும் கூறியுள்ளார். இந்த தகவலை மும்பை போலீசாரும் உறுதிப்படுத்தினர்.
ரிபப்ளிக் டி.வி. சேனல் அதிகாரி வராத போதும், மடிசன் என்ற விளம்பர நிறுவன நிர்வாக இயக்குனர் சாம் பல்சாரா மும்பை போலீசாரிடம் டி.ஆர்.பி. ரேட்டிங் மோசடி தொடர்பாக நேற்று அவரது வாக்குமூலத்தை பதிவு செய்தார். இதற்கிடையே பக்த் மராத்தி, பாக்ஸ் சினிமா ஆகிய சேனல்களின் கணக்காளர்கள் விசாரணைக்கு ஆஜராகுமாறு மும்பை போலீசாா் சம்மன் அனுப்பி உள்ளனர்.