உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழாவை டாக்டர் தொடங்கி வைக்கிறார் - மந்திரி எஸ்.டி.சோமசேகர் அறிவிப்பு
உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழா வருகிற 17-ந்தேதி தொடங்குகிறது. இந்த விழாவை கொரோனா போராளியான டாக்டர் மஞ்சுநாத் தொடங்கிவைக்கிறார் என்று மந்திரிஎஸ்.டி.சோமசேகர் அறிவித்துள்ளார்.
மைசூரு,
கர்நாடகத்தின் அரண்மனை நகரமான மைசூருவில் ஆண்டுதோறும் விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு 10 நாட்கள் தசரா விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதுபோல் இந்த ஆண்டுக்கான மைசூரு தசரா விழா வருகிற 17-ந்தேதி தொடங்கி 26-ந்தேதி வரை நடக்கிறது.
கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு தசரா விழா மிகவும் எளிமையாக நடத்தப்படுகிறது. அதாவது பல்வேறு கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் ரத்து செய்யப்பட்டு உள்ளது. குறிப்பாக மைசூரு அரண்மனை வளாகத்தில் இருந்து பன்னிமண்டபம் வரை 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடக்கும் ஜம்பு சவாரி ஊர்வலமும் எளிமையாக நடத்தப்படுகிறது. அதாவது இந்த முறை அரண்மனை வளாகத்திலேயே ஜம்பு சவாரி ஊர்வலம் நடக்கிறது. எப்போதும் ஜம்புசவாரி ஊர்வலத்தில் 15 யானைகள் பங்கேற்கும். ஆனால் இந்த ஆண்டு 5 யானைகள் மட்டுமே கலந்துகொள்ள வந்துள்ளது.
அந்த யானைகளுக்கு மைசூரு அரண்மனையில் வைத்து நடைபயிற்சி, மணல் மூட்டைகளை சுமக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. விரைவில் அந்த யானைகளுக்கு வெடி சத்தம் கேட்டு மிரளாமல் இருக்க பீரங்கி குண்டுகளை வெடிக்க செய்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மேலும் மைசூரு தசரா விழா தொடங்க இன்னும் 6 நாட்கள் இருப்பதால் தசரா விழாவுக்கான ஏற்பாடுகள் மைசூரு அரண்மனை வளாகம், சாமுண்டிமலையில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதையொட்டி மைசூரு மாநகரில் உள்ள அரசு கட்டிடங்கள், நினைவுசின்னங்கள் புதுப்பிக்கும் பணி நடந்து முடிந்துள்ளது. தற்போது அரண்மனை கட்டிடம், சாமுண்டிமலை, நகரின் முக்கிய வீதிகள் மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கிறது.
ஆண்டுதோறும் மைசூரு தசரா விழாவை பிரபல எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள், பிரபலங்கள் என யாராவது ஒருவரை தொடங்கிவைக்க அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா பரவலுக்கு மத்தியில் தசரா விழா நடைபெறுவதால், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்களை கவுரவிக்கும் வகையில், மைசூரு தசரா விழாவை தொடங்கிவைக்க கொரோனா போராளி ஒருவருக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று கர்நாடக அரசு அறிவித்தது.
இதற்காக மைசூரு மாவட்ட நிர்வாகம், பெயர்களை தேர்வு செய்து முதல்-மந்திரி எடியூரப்பாவின் ஒப்புதலுக்கு அனுப்பிவைத்தது. இந்த நிலையில் மைசூரு தசரா விழாவை தொடங்கிவைக்க டாக்டர் மஞ்சுநாத் என்பவரை எடியூரப்பா தேர்வு செய்துள்ளார். வருகிற 17-ந்தேதி சாமுண்டிமலையில் உள்ள சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு மலர்கள் தூவி தசரா விழாவை அவர் தொடங்கிவைக்கிறார். இதில் 200 பேர் மட்டுமே பங்கேற்க அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இதையொட்டி கொரோனா போராளிகளான துப்புரவு தொழிலாளி மரிகம்மா, சுகாதாரத் துறை அதிகாரி டாக்டர் நவீன், செவிலியர் ருக்மணி, ஆஷா ஊழியர் நூர்ஜான், மைசூரு நகர போலீஸ்காரர் குமார், சமூக ஆர்வலர் அயூப் அகமது ஆகியோரை கவுரவப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
மைசூரு தசரா விழாவை தொடங்கிவைக்க உள்ள டாக்டர் மஞ்சுநாத், மைசூரு ஜெயதேவா இதய மருத்துவமனையின் இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கண்ட தகவலை மைசூரு மாவட்ட பொறுப்பு மந்திரியும், மாநில கூட்டுறவு துறை மந்திரியுமான எஸ்.டி.சோமசேகர் நேற்று அறிவித்தார்.
மேலும் மந்திரி எஸ்.டி.சோமசேகர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கொரோனா பரவல் காரணமாக தசரா விழாவை எப்படி கொண்டாடுவது என்பது பற்றி ஆராய டாக்டர் சுதர்சன் தலைமையில் தொழில்நுட்ப குழுவை கர்நாடக அரசு அமைத்திருந்தது. அந்த குழு ஆய்வு செய்து அரசிடம் அறிக்கையை அளித்துள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகள் படி தசரா விழா நிகழ்ச்சிகள் நடத்தப்படும். இந்த குழு அறிக்கையின்படி தசரா விழா தொடக்க விழாவில் 200 பேரும், ஜம்பு சவாரி ஊர்வலத்தில் 300 பேரும், கலாசார நிகழ்ச்சிகளில் 50 பேரும் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்பட உள்ளனர். தொழில்நுட்ப குழுவை கலந்து ஆலோசிக்காமல் இதில் எந்த மாற்றமும் செய்ய மாட்டோம்.
மைசூரு மாவட்டத்தில் 350 ஊடகவியலாளர்கள் உள்ளனர். இதில் 50 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்க முடிவு செய்துள்ளோம். அதுபோல் 50 மக்கள் பிரதிநிதிகள் உள்ளனர். அவர்களில் 25 பேர் மட்டுமே தசரா விழாக்களில் கலந்துகொள்ளலாம். பாதுகாப்பு பணிக்கு 100-க்கும் குறைவான போலீசார் மட்டுமே பயன்படுத்த முடிவு செய்துள்ளோம். தசரா விழா நிகழ்ச்சிகளில் அனுமதி இல்லாமல் யாரும் கலந்துகொள்ளக் கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து குடகு-மைசூரு மாவட்ட பா.ஜனதா எம்.பி. பிரதாப் சிம்ஹா கூறுகையில், நடப்பு ஆண்டு தசரா விழாவை கொரோனா போராளிகள் மூலம் தொடங்கிவைக்க கர்நாடக அரசு முடிவு செய்தது. அதற்கான பெயர் பரிசீலனை நடந்து வந்தது. இந்த நிலையில் தசரா விழாவை தொடங்கிவைக்க மைசூரு ஜெயதேவா இதய நோய் மருத்துவமனை டாக்டர் மஞ்சுநாத் தேர்வாகி உள்ளார். இதற்கு அவருக்கு பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்துக்கொள்கிறேன். அரசின் இந்த முடிவால் மைசூரு மாவட்ட மக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்றார்.