காங்கிரஸ் எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர் கொலையில் போலீசாரால் தேடப்பட்ட 2 பேர் கைது

காங்கிரஸ் எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர் கொலையில் போலீசாரால் தேடப்பட்டு வந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2020-10-10 23:00 GMT
புதுச்சேரி, 

முத்தியால்பேட்டை சின்னையாபுரம் அக்காசாமி மடம் வீதியை சேர்ந்தவர் கணேசன் (வயது49). கதர்வாரிய அதிகாரி. காங்கிரஸ் எம்.எல்.ஏ.வின் தீவிர ஆதரவாளர். இவர் கடந்த 7-ந் தேதி துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு திரும்பியபோது மர்ம கும்பலால் வழிமறித்து வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக உருளையன்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சஜித் நியமிக்கப்பட்டார். விசாரணையில் முத்தியால்பேட்டையை சேர்ந்த வெங்கடேஷ், அரவிந்த், முனீஸ்வரன் என்ற கட்ட செந்தில், உதயகுமார், ஜான்போஸ், ஏழுலை, பாலா, நாகராஜ் (37), சுந்தர் (21) ஆகிய 9 பேர் கொண்ட கும்பலுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதில் வெங்கடேஷ், அரவிந்த், முனீஸ்வரன் என்ற கட்ட செந்தில் உள்பட 7 பேரை ஏற்கனவே போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவாக இருந்து வந்த சின்னையாபுரம் நாகராஜ், சுந்தர் ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.

இவர்கள் வைத்திக்குப்பம் பாரதிதாசன் கல்லறை பின் புறம் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் தெரியவந்தது. உடனே அங்கு சென்ற போலீசார் நாகராஜ், சுந்தர் ஆகியோரை சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைதான இருவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் தொற்று இல்லை என்பது தெரியவந்ததையடுத்து போலீசார் அவர்களை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்