தீபாவளி பரிசாக ரூ.2 ஆயிரம் வழங்கவேண்டும்: ஆட்டோ தொழிலாளர்கள் கோரிக்கை
தீபாவளி பரிசாக ரூ.2 ஆயிரம் வழங்கவேண்டும் என்று ஆட்டோ தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுச்சேரி,
புதுவை ஆட்டோ தொழிலாளர் நலச்சங்க மாநில பொதுக்குழு கூட்டம் முதலியார்பேட்டை ஏ.ஐ.டி.யு.சி. தலைமை அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு ஆட்டோ சங்க மாநில தலைவர் சேகர் தலைமை தாங்கினார்.
ஆட்டோ சங்க மாநில பொதுச்செயலாளர் சேதுசெல்வம் நடந்த வேலைகள் தொடர்பாக பேசினார். செயல் தலைவர் அபிசேகம், ஏ.ஐ.டி.யு.சி. மாநில தலைவர் தினேஷ் பொன்னையா, ஆட்டோ சங்க நிர்வாகிகள் செந்தில்முருகன், பாளையத்தான், ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில், அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியத்தை நடைமுறைப்படுத்திட அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு தீபாவளிக்கு வழங்கப்படும் பரிசுக் கூப்பன் தொகையை ரூ.2 ஆயிரமாக அரசு உயர்த்தி வழங்க வேண்டும். ஊரடங்கால் வருமானம் இழந்த அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு மார்ச், ஏப்ரல், மே மாதங்களுக்கு தலா ரூ.7,500 வீதம் வழங்கவேண்டும்.
ஊரடங்கினால் கடந்த 200 நாட்களுக்கு மேலாக ஓடாத வாகனங்களுக்கு சாலைவரி, புதுப்பித்தல் கட்டணம், இன்சூரன்சு உள்ளிட்டவைகளுக்கு ஓராண்டுக்கு விதிவிலக்கு அளிப்பதுடன் கட்டணமில்லாமல் புதுப்பிக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.