பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகளின் நீர் இருப்பு 5 டி.எம்.சி.யை நெருங்குகிறது
சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், சோழவரம் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளின் நீர் மட்டம் 5 டி.எம்.சி.யை நெருங்குகிறது என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.;
சென்னை,
சென்னை மாநகருக்கு பூண்டி, புழல், சோழவரம் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகள் மூலம் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த ஏரிகளில் கடந்த சில மாதங்களாக போதிய மழை இல்லாததால் பூண்டி, சோழவரம் ஏரிகள் வறண்டு விடும் நிலைக்கு தள்ளப்பட்டன. இந்தநிலையில் ஆந்திர மாநில அரசுடன் செய்து கொண்ட கிருஷ்ணா நதிநீர் ஒப்பந்தத்தின்படி தற்போது இந்த ஆண்டுக்கான முதல் தவணை தண்ணீர் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு திறந்துவிடப்பட்டு உள்ளது.
இந்த தண்ணீர் பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 670 கன அடி வீதம் வந்து கொண்டு இருக்கிறது. இதன் மூலம் பூண்டி ஏரியின் நீர் இருப்பு 1,177 மில்லியன் கன அடியாக உயர்ந்து உள்ளது. அதேபோல் சோழவரம் ஏரியில் 110 மில்லியன் கன அடி, புழல் ஏரியில் 2 ஆயிரத்து 85 கன அடியும், செம்பரம்பாக்கத்தில் 1,546 கன அடி என மொத்தம் 4 ஆயிரத்து 918 (4.91 டி.எம்.சி.) தண்ணீர் இருப்பு உள்ளது. ஓரிரு நாட்களில் 5 டி.எம்.சி.யை எட்ட உள்ளது. இதன் மூலம் ஏரிகளின் நீர் மட்டமும் உயர்ந்து உள்ளது.
குடிநீர் தேவைக்காக பூண்டியில் இருந்து 15 கன அடியும், புழல் ஏரியில் இருந்து 116 கன அடியும், செம்பரம்பாக்கத்தில் இருந்து 67 கன அடியும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் சென்னையின் புறநகர் பகுதிகளில் மழை பெய்தாலும், ஏரிகளின் நீர் பிடிப்பு பகுதிகளில் அளவிடும் வகையில் பெய்யவில்லை.
தற்போது இருக்கும் தண்ணீர் 5 மாத தேவையை பூர்த்தி செய்ய முடியும். அதன்பிறகு பருவமழையை நம்பி தான் இருக்க வேண்டி இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 1,052 கன அடி மட்டுமே 4 ஏரிகளிலும் தண்ணீர் இருப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேற்கண்ட தகவலை சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.