அந்தியூர் பகுதியில் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை; 10 ஆயிரம் வாழைகள் நாசம்

அந்தியூர் பகுதியில் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழைகள் நாசம் ஆனது.

Update: 2020-10-10 22:30 GMT
ஈரோடு, 

ஈரோடு மாவட்டம் அந்தியூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள புதுப்பாளையம், கெட்டிசமுத்திரம், ஜே.ஜே.நகர், தண்ணீர்பந்தல், கிருஷ்ணாபுரம் ஆகிய பகுதிகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் வாழைகளை பயிரிட்டு உள்ளனர். இந்த நிலையில் அந்தியூர் பகுதியில் நேற்று இரவு 8 மணி அளவில் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை பெய்ய தொடங்கியது.

இதில் சூறாவளிக்காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் அந்த பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழைகள் அடியோடு சாய்ந்து நாசம் ஆனது. மேலும் மக்காச்சோள பயிர்களும் சாய்ந்து நாசம் ஆனது.

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், ‘நாங்கள் பல்வேறு வங்கிகளில் நகைகளை அடகு வைத்து வாழை மற்றும் மக்காச்சோளத்தை பயிரிட்டு உள்ளோம். மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் வாழைகளை வளர்த்து வந்தோம். இந்த நிலையில் சூறாவளிக்காற்று வீசி எங்களுடைய வாழை மற்றும் மக்காச்சோளத்தை சாய்த்து விட்டது. எனவே விவசாய துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சாய்ந்து விழுந்த வாழை மற்றும் மக்காச்சோள பயிர்களை கணக்கிட்டு விவசாயிகளுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.

மேலும் சூறாவளிக்காற்றால் மரங்கள் முறிந்து விழுந்ததில் அந்தியூர் பகுதியில் பல இடங்களில் மின் கம்பிகள் அறுந்து விழுந்தன. இதுபற்றி அறிந்ததும் மின்வாரிய துறை அதிகாரிகள் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் விரைந்து சென்று மரங்களை அப்புறப்படுத்தியதுடன், மின் இணைப்பு கொடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.

கொடுமுடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நேற்று முன்தினம் பகல் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் இரவு 10 மணி அளவில் பலத்த மழை பெய்ய தொடங்கியது. நள்ளிரவு 12 மணி வரை மழை கொட்டி தீர்த்தது. மேலும் சூறாவளிக்காற்றும் வீசியது. பலத்த மழை காரணமாக ரோடுகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது.

இதேபோல் கொடுமுடியை அடுத்த பெரியவட்டம், சாலைப்புதூர், க.ஒத்தக்கடை, வெங்கம்பூர், காசிபாளையம் ஆகிய பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. மொடக்குறிச்சி பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக சாவடிபாளையம் ரெயில்வே நுழைவு பாலத்தில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அந்த வழியாக இரு சக்கர வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

பவானிசாகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலையில் வெயில் அதிக அளவில் இருந்தது. மாலை 3 மணி அளவில் திடீரென்று வானத்தில் கருமேகங்கள் ஒன்று கூடியது. பின்னர் 3.30 மணிக்கு திடீரென பலத்த மழை பெய்ய தொடங்கியது. 4.30 மணி வரை இந்த மழை கொட்டி தீர்த்தது. இந்த மழையால் பவானிசாகர் பகுதியில் உள்ள ரோடுகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பவானிசாகர் பகுதியில் குளிர்ந்த காற்று வீச தொடங்கியது.

இதேபோல் தாளவாடியை அடுத்த தலமலை, கோடிபுரம், பெஜலட்டி, சிக்கள்ளி, நெய்தாளபுரம், கெட்டவாடி ஆகிய பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

மேலும் செய்திகள்