சங்கரன்கோவில் நகரசபை மேம்பாட்டு பணிகளை அமைச்சர் ராஜலட்சுமி ஆய்வு
சங்கரன்கோவில் நகரசபை மேம்பாட்டு பணிகளை அமைச்சர் ராஜலட்சுமி ஆய்வு செய்தார்.
சங்கரன்கோவில்,
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகரசபை பகுதியில் சேகரிக்கப்படும் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தற்போது நகரில் 3 இடங்களில் அதை உரமாக மாற்றும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் குப்பைகள் மொத்தமாக ஒரு இடத்தில் சேராத வகையில், அந்தந்த பகுதிகளிலேயே பிரிக்கப்பட்டு அழிக்கப்படுகிறது.
இந்த நிலையில் சங்கரன்கோவில் நகரசபை அருகில் ஏற்கனவே குப்பைகள் கொட்டப்பட்டுள்ள இடத்திற்கு அருகில், மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தனியாக பிரித்து எடுத்து மறுசுழற்சி செய்தும், உரங்கள் தயாரிக்கும் வகையில் சுமார் ரூ.4.15 கோடி மதிப்பீட்டில் நவீன எந்திரம் வாங்கப்பட்டு, அதன் மூலம் குப்பைகளை பிரித்து உரம் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது. இதனால் அந்த பகுதி முழுவதும் சில மாதங்களில் சுத்தமாக மாற்றப்படும் நிலை உருவாகியுள்ளது.
இந்த பணிகளை அமைச்சர் ராஜலட்சுமி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர், அங்கு தயாராகும் உரங்களை விவசாயிகளுக்கு விரைவில் வழங்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். பின்னர் அவர், சங்கரன்கோவில் 30-வது வார்டு ஏ.வி.ஆர்.எம்.வி. சாலை, பாரதியார் நகர், தேனப்பபுரம் தெரு, அம்மன் சன்னதி தெரு, திருவுடையான் சாலை ஆகிய பகுதிகளில் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் ரூ.1 கோடியே 95 லட்சம் மதிப்பீட்டில் நடைபெறும் சாலை பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த சாலை பணிகளை விரைந்து நிறைவேற்றுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
நகரசபை ஆணையாளர் முகைதீன் அப்துல் காதர் மற்றும் பலர் உடன் இருந்தனர்.