சிதம்பரநகர் மார்க்கெட் வியாபாரிகள் குடும்பத்துடன் தர்ணா போராட்டம்

தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் முன்பு சிதம்பரநகர் மார்க்கெட் வியாபாரிகள் நேற்று தர்ணா போராட்டம் நடத்தினர்.

Update: 2020-10-10 22:30 GMT
தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாநகராட்சிக்கு சொந்தமான சிதம்பரநகரில் உள்ள மார்க்கெட்டில் 60-க்கும் மேற்பட்ட கடைகள் ஒப்பந்த முறையில் அமைக்கப்பட்டு மாநகராட்சி வாடகை பெற்று வருகிறது. இந்த நிலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் இந்த இடத்தில் புதிய வணிக வளாகம் கட்டப்பட உள்ளது. இதற்கான டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கப்பட உள்ளது.

இதனால் இதுதொடர்பாக மார்க்கெட்டில் கடை வைத்திருக்கும் வியாபாரிகள் தரப்பில் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தனர். இந்த நிலையில் எந்தவிதமான முன்னறிவிப்பும் இன்றி கடந்த 8-ந் தேதி அதிகாலை 5 மணி அளவில் சந்தையை மாநகராட்சி அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். இதுபற்றி விளக்கம் கேட்டதற்கு அதிகாரிகள் சரியான பதில் ஏதும் கூறவில்லை என்று கூறப்படுகிறது.

இதையடுத்து இதுதொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதால் மார்க்கெட்டில் கடைகள் வைத்துள்ள வியாபாரிகள் உயர் நீதிமன்றத்தை நாடினர். இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி, சிதம்பரநகர் மார்க்கெட்டை நேற்று முன்தினம் மாலை 5 மணிக்குள் மீண்டும் திறக்க உத்தரவு பிறப்பித்தார். ஆனால் நேற்று வரை மார்க்கெட் திறக்கப்படாததால் நேற்று மீண்டும் வியாபாரிகள் அனைவரும் தங்களது குடும்பத்தினருடன் மார்க்கெட் வாசலில் அமர்ந்து கண்களில் கருப்பு துணியை கட்டி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். நீதிமன்ற உத்தரவை மதிக்காத அதிகாரிகளை கண்டிப்பதாகவும், ஆடு, மாடு, கோழிகள் ஆகியவற்றை உயிரோடு வைத்து சந்தையை பூட்டி உயிரினங்களை சித்ரவதை செய்வதை கண்டிப்பதாகவும் தங்களது கைகளில் கோரிக்கை அட்டைகளை வைத்த வண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

அதைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு தங்கள் குடும்பத்துடன் வியாபாரிகள் சென்றனர். அங்கு கலெக்டர் அலுவலகம் முன்பு அமர்ந்து மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜூ, கலெக்டர் சந்தீப் நந்தூரியிடமும் மீண்டும் மார்க்கெட்டை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தனர்.

மேலும் செய்திகள்