கணவன் இறந்த துக்கத்தில் மகன், மகளுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை முயற்சி - மகள் இறந்த பரிதாபம்

கணவன் இறந்த துக்கத்தில் மகன், மகளுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலைக்கு முயன்றார். இதில் பெண் குழந்தை இறந்தது. தாய் எழுதிய உருக்கமான கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2020-10-10 05:30 GMT
வேலூர், 

வேலூர் தோட்டப்பாளையம் எட்டியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நரேஷ்குமார். இவரது மனைவி கோமதி (வயது 27). இவர்களுக்கு நித்தில்குமார் (5) என்ற மகனும், ரியாஸ்ரீ (3) என்ற மகளும் உண்டு. கடந்த மாதம் நரேஷ்குமார் நெஞ்சுவலி காரணமாக இறந்து விட்டார். இதனால் கோமதி மனமுடைந்து, விரக்தியுடன் காணப்பட்டுள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தூங்கும் முன்பு கோமதி, குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளார். அதன்படி அவர் கொசுமருந்தை 2 குழந்தைகளுக்கும் கொடுத்துள்ளார். விஷம் என்பதை அறியாத குழந்தைகள் அதை வாங்கி குடித்துள்ளனர். பின்னர் கோமதியும் குடித்திருக்கிறார். இந்த நிலையில் அதிகாலையில் மாமனார் தட்சிணாமூர்த்தி, மாமியார் பேபியம்மாள் மற்றும் குடும்பத்தினர் பார்த்துள்ளனர். அப்போது கோமதியும், குழந்தைகளும் மயங்கிய நிலையில் சுயநினைவின்றி கிடந்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், 3 பேரையும் உடனடியாக மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதனை செய்த டாக்டர்கள், ரியாஸ்ரீ ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த இருவருக்கும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதுகுறித்து வேலூர் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். வீட்டில் கோமதி எழுதி வைத்திருந்த ஒரு கடிதத்தை போலீசார் கைப்பற்றினர்.

அந்த கடிதத்தில் கோமதி எழுதியிருந்ததாவது:-

அம்மா, அப்பா, மாமா, அத்தை அனைவரும் என்னை மன்னித்து விடுங்கள். என்னால் அவர் இல்லாத உலகத்தில் வாழ முடியவில்லை. எப்போதும் அவரது நினைவாகவே உள்ளது. அவர் இல்லாத உலகில் என்னால் சத்தியமாக வாழ முடியாது. அவர் தான் எனது உலகம். எனவே நானும் எனது குழந்தைகளும் அவருடன் மேலோகத்தில் வாழப்போகிறோம். அவர் யாருக்கும் கஷ்டம் கொடுத்ததில்லை. அதேபோல் மேலோகத்திலும் யாருக்கும் கஷ்டம் கொடுக்காமல் வாழ்வோம்.

இவ்வாறு அவர் எழுதியிருந்தார். பின்னர், குழந்தையின் உடலை போலீசார் கைப்பற்றி வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தசம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்