ஜமுனாமரத்தூர் அருகே மின்னல் தாக்கி தொழிலாளி பலி
ஜமுனாமரத்தூர் அருகே மின்னல் தாக்கி தொழிலாளி பலியானார்.
போளுர்,
திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. போளூரிலும் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. இதேபோல் சேத்துப்பட்டு இதைச்சுற்றியுள்ள பெரிய கொழப்பலூர், இந்திரவனம், செம்மபாடி, கங்கைசூடாமணி, உலகம்பட்டு. நெடுங்குணம் ஆகிய பகுதிகளிலும் பிற்பகல் 3 மணியிலிருந்து 35 நிமிடம் தொடர்ந்து பலத்த மழை பெய்தது.
திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர் அடுத்த கோவிலூர் ஊராட்சிக்கு உட்பட்ட கீழ்கோமுட்டேரி கிராமத்தை சேர்ந்தவர் சின்னகுழந்தை (வயது 45) கூலி தொழிலாளி. நேற்று மாலை 3 மணியளவில் வேலை முடித்து கொண்டு வீடு திரும்பும்போது மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்த கிராம நிர்வாக அலுவலர் சேட்டு மற்றும் ஜமுனாமரத்தூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சரவணன் நேரில் சென்று விசாரணை நடத்தினர். பின்னர் பிணத்தை அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
நேற்று காலை 8 மணி நிலவரப்படி மாவட்டத்திலேயே அதிக பட்சமாக போளூரில் 118.40 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மழை காரணமாக போளூர் நல்ல தண்ணீர் குளத்துக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. பொதுப்பணித்துறையின் பராமரிப்பில் உள்ள 106 ஏரிகளுக்கு நீர்வரத்து கூடுதலாக உள்ளது. இதனால் விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். எனினும் உயரிழப்பும் நிகழ்ந்துள்ளது.