கொரோனா ஊரடங்கு காரணமாக பிறந்த குழந்தையை பார்க்க முடியாமல் தவித்த வங்கி மேலாளர்

கொரோனா ஊரடங்கு காரணமாக பிறந்த குழந்தையை 7 மாதங்களாக பார்க்க முடியாமல் சென்னிமலையை சேர்ந்த வங்கி மேலாளர் தவித்தார். ஊரடங்கு தளர்த்தப்பட்டதால் ஆந்திராவுக்கு சென்று குழந்தையை பார்த்து ஆசையுடன் கொஞ்சி மகிழ்ந்தார்.

Update: 2020-10-10 00:29 GMT
சென்னிமலை,

ஆந்திர மாநிலம் விஜயவாடா பகுதியை சேர்ந்தவர் நவீன். இவர் ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் ஊத்துக்குளி ரோட்டில் உள்ள ஒரு அரசு வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ஸ்ரவந்தி. இவர்களுடைய மகன் பார்கவ் (வயது 3). நவீன் சென்னிமலையில் வாடகைக்கு வீடு எடுத்து குடும்பத்துடன் தங்கி இருந்தார்.

இந்த நிலையில் ஸ்ரவந்தி மீண்டும் கர்ப்பம் அடைந்தார். இதைத்தொடர்ந்து பிரசவத்துக்காக ஸ்ரவந்தி கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆந்திர மாநிலத்தில் உள்ள தனது சொந்த ஊருக்கு சென்றார். வங்கி மேலாளர் நவீன் மட்டும் சென்னிமலையில் தனியாக தங்கியிருந்தார்.

தவிப்பு

இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் ஸ்ரவந்திக்கு பெண் குழந்தை பிறந்தது. தனது குழந்தையை ஆசையுடன் பார்ப்பதற்காக நவீன் ஊருக்கு செல்ல இருந்த நிலையில் திடீரென கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.

மேலும் மாவட்டத்தை விட்டே வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் நவீனும் தனது ஆசை மகளை பார்க்க முடியாமல் தவித்தார்.

எனினும் வீடியோ கால் மூலம் தனது மகளை பார்த்து ஏங்கினார். தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டதாலும், வங்கியில் விடுப்பு கிடைத்ததாலும் ஆந்திராவுக்கு செல்ல விரும்பினார். இதைத்தொடர்ந்து கடந்த 4 நாட்களுக்கு முன்பு அவர் ஆந்திர மாநிலத்தில் உள்ள தன்னுடைய சொந்த ஊருக்கு சென்றார்.

அங்கு ஆசையுடன் தனது மகளை எடுத்து கொஞ்சி மகிழ்ந்தார். 7 மாதங்களுக்கு பிறகு தன்னுடைய மகளை பார்த்ததால் நவீன் ஆனந்த கண்ணீர் வடித்தார்.

மேலும் செய்திகள்