புதுக்கோட்டை ஸ்ரீபுவனேஸ்வரி தங்க மாளிகையில் மிகப்பெரிய தங்க ஒட்டியாணம் செய்து உலக சாதனை

புதுக்கோட்டை ஸ்ரீபுவனேஸ்வரி தங்க மாளிகையில் மிகப்பெரிய தங்க ஒட்டியாணம் செய்து உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது.

Update: 2020-10-07 16:19 GMT
புதுக்கோட்டை,

புதுக்கோட்டை ஸ்ரீபுவனேஸ்வரி தங்க மாளிகையின் 40-வது ஆண்டையொட்டி நகை வணிகத்தில் ஒரு உலக சாதனை முயற்சி மேற்கொள்ள திட்டமிட்டனர். அதன்படி 2 கிலோ 851 கிராம் 260 மில்லி கிராம் எடையில் சொக்க தங்கத்தில் பெரிய அளவில் ஹால்மார்க் உலக தரத்துடன் தங்க ஒட்டியாணம் செய்தனர். இதை நிறுவனத்தை தொடங்கிய சோமசுந்தரம் ஆச்சாரியரின் 14-வது நினைவு நாளான நேற்று ஸ்ரீபுவனேஸ்வரி தங்கமாளிகையில் உலக சாதனையாக அறிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி முன்னிலை வகித்தார். எலைட் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ், ஏசியா பசிபிக் அம்பாஸிடர் ஜவகர் கார்த்திகேயன், இந்தியா ரெக்கார்ட்ஸ் அகாடமி அசோசியேட் எடிட்டர் ஜெகன்நாதன், தமிழன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ், தென்னிந்திய ஆய்வாளர் ராஜ்கிருஷ்ணா ஆகியோர் ஒட்டியாணத்தின் தரம், எடை, நீளம், அகலம் மற்றும் கலைநயம் போன்றவற்றை ஆய்வு செய்தனர். இந்த ஆய்விற்கு பின் உலக சாதனைக்கான சான்றிதழ்களை வழங்கினர்.

இது குறித்து உரிமையாளர் சோம.நடராஜன் கூறும்போது, இந்த ஒட்டியாணம் 8 மாதங்கள் கடுமையாக உழைத்து தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஒட்டியாணத்தில் நடுப்பகுதியில் காமாட்சியம்மன் பத்மாசன யோகா நிலையிலும், மற்ற இருபுறமும் அஷ்ட லட்சுமியின் உருவங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது 41.5 இன்ச் நீளமும், 7 இன்ச் அகலமும் கொண்டது என்றார். நிகழ்ச்சியில், செந்தூரான் கல்வி நிறுவனங்களின் முதன்மை செயலாளர் ஏ.வி.எம். கார்த்திக், வைரவன், ஓட்டல் மாகிராண்டு உரிமையாளர் மாரிமுத்து, டாக்டர் ராஜமாணிக்கம், டாக்டர். முத்துராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக உரிமையாளர்கள் யோகநாதன், விஜய்ஸ்ரீநாத் ஆகியோர் வரவேற்றனர்.

மேலும் செய்திகள்