இளம்பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் மேலும் ஒரு வாலிபர் கைது

பல்லடத்தில் அசாம் மாநில இளம்பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் மேலும் ஒரு வாலிபரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீசார் கூறியதாவது.

Update: 2020-10-07 12:12 GMT
பல்லடம்,

அசாம் மாநிலத்தை சேர்ந்த 27 வயது பெண் ஒருவர் கோவை சரவணம்பட்டியில் தங்கி அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு பல்லடத்தில் உள்ள நண்பரான ராஜேஷ்குமார் என்பவரை வேலை விசயமாக அழைத்துள்ளார். இதையடுத்து அந்த பெண் சரவணம்பட்டியில் இருந்து பல்லடம் வந்துள்ளார்.

பினனர் ராஜேஷ்குமாரை சந்தித்து பேசி விட்டு, அங்கிருந்து கோவைக்கு பஸ்சில் செல்வதாக கூறினார். இதையடுத்து ராஜேஷ்குமாரின் தம்பி ராஜூ (வயது 22) என்பவர், அந்த பெண்ணை ஒரு மோட்டார் சைக்கிளில் பஸ் நிலையத்திற்கு அழைத்து செல்வதாக கூறியுள்ளார். இதையடுத்து அந்த பெண், ராஜூவை நம்பி, அவர் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிளில் ஏறினார்.

ஆனால் மோட்டார் சைக்கிளை பஸ் நிலையத்திற்கு ராஜூ ஓட்டிச்செல்லாமல், கள்ளிமேடு- உகாயனூர் ரோட்டில் பாறை குழிக்கு ஓட்டிச் சென்றதாகவும், அங்கு வைத்து ராஜூ மற்றும் அவரது நண்பர்கள் 4 பேர் கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், பல்லடம் போலீசில் அந்த பெண் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் பெண்ணை, பாலியல் பலாத்காரம் செய்த ஆசாமிகளை பிடிக்க பல்லடம் போலீஸ் துணை சூப்பிரண்டு ராமச்சந்திரன், அவினாசி இன்ஸ்பெக்டர் அருள், பல்லடம் மகளிர் இன்ஸ்பெக்டர் கோமதி, ஆகியோரது தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் ராஜூ (22), அன்புச்செல்வன் (21), கவின்குமார் (21), தாமோதரன் (24), ராஜேஷ்குமார் (24) ஆகிய 5 பேர் ஏற்கனவே கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய தமிழ் என்கின்ற இளந்தமிழன் (24) என்பவர் மதுரையில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் மதுரை சென்று, இளந்தமிழனை கைது செய்தனர். பின்னர் அவரை பல்லடம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்