கம்பம் அருகே, காதல் மனைவியை கொன்று விட்டு நாடகமாடிய கணவர் கைது
கம்பம் அருகே காதல் மனைவியை கொன்று விட்டு நாடகமாடிய கணவர் கைது செய்யப்பட்டார்.
உத்தமபாளையம்,
கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டி மந்தையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கேப்டன் பிரபாகரன் (வயது 32). தஞ்சாவூரை சேர்ந்த முருகேசன் மகள் கவிதா(27). இவர்கள் இருவரும் சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்தபோது காதலித்து கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்துக்கு பிறகு அவர்கள் காமயகவுண்டன்பட்டியில் வசித்து வந்தனர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கணவன், மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது.
அப்போது கேப்டன் பிரபாகரன் ஆத்திரம் அடைந்து கவிதாவை அடித்து கீழே தள்ளினார். இதில் கவிதாவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கம்பம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் கவிதா ஏற்கனவே இறந்தது தெரியவந்தது. இது குறித்த தகவலின் பேரில் ராயப்பன்பட்டி போலீசார் அங்கு விரைந்து வந்து கேப்டன் பிரபாகரனிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவர், கவிதா நடந்து செல்லும் போது வீட்டில் வழுக்கி விழுந்து விட்டார் என்றும், இதில் தலையில் ஏற்பட்ட பலத்த காயத்தால் அவர் இறந்து விட்டார் என்றும் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து கவிதாவின் சாவில் சந்தேகம் உள்ளது என போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையில் கவிதா அடித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. அதன்பேரில் வழக்கை போலீசார் கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து மனைவி வீட்டில் வழுக்கி விழுந்ததில் காயம் அடைந்து இறந்து விட்டதாக நாடகமாடிய கேப்டன் பிரபாகரனை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.