திருக்கடையூர் அரசு விதைப்பண்ணையில் ரூ.12 லட்சத்தில் புதிய அலுவலக கட்டிடம் - அமைச்சர் ஓ.எஸ்.மணியன் திறந்து வைத்தார்

திருக்கடையூர் அரசு விதைப்பண்ணையில் ரூ.12 லட்சத்தில் புதிய அலுவலக கட்டிடத்தை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் திறந்து வைத்தார்.;

Update: 2020-10-05 21:45 GMT
திருக்கடையூர்,

திருக்கடையூர் அரசு விதை பண்ணையில் ரூ.12 லட்சத்தில் புதிய அலுவலக கட்டிடம் கட்டப்பட்டு, அதன் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் பிரவீன்நாயர் தலைமை தாங்கினார். பூம்புகார் தொகுதி எம்.எல்.ஏ. பவுன்ராஜ் முன்னிலை வகித்தார். வேளாண்மை இணை இயக்குனர் கல்யாணசுந்தரம் வரவேற்றார். இதில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கலந்து கொண்டு ரூ.12 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய விதைப்பண்ணை அலுவலக கட்டிடத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து நபார்டு திட்டத்தின் மூலம் ரூ.49 லட்சத்து 30 ஆயிரம் செலவில் புதிய பண்ணை அலுவலக கட்டிடம், பாசன வாய்க்கால் சீரமைத்தல், கதிரடிக்கும் களம் அமைத்தல், பண்ணை குட்டைகள் சீரமைத்தல், மின் கம்பி வேலி மற்றும் கதவு அமைத்தல் உள்ளிட்ட பணிகளை தொடங்கி வைத்து, குழித்தட்டு முறையில் நெல் பயிரிடும் எந்திரத்தை பார்வையிட்டார். பின்னர் மரக்கன்றுகளை நட்டினார்.

பின்னர் அமைச்சர் நிருபர்களிடம் கூறுகையில்,

குறுவை நெல்லை கொள்முதல் செய்ய 149 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வந்ததாகவும், முதல்-அமைச்சர் அறிவித்த புதிய விலை உயர்வுடன் மீண்டும் நெல் கொள்முதல் நிலையங்கள் தொடங்கும். வேளாண்மைக்காக ரூ.10 ஆயிரம் கோடிக்கு மேல் முதல்-அமைச்சர் ஒதுக்கீடு செய்துள்ளார். மேலும் கடந்த 4 ஆண்டுகளாக வேளாண்மை உற்பத்திக்கான விருதினை தமிழக அரசு பெற்று வருகிறது.

காந்தி ஜெயந்தியையொட்டி நடைபெற இருந்த கிராமசபை கூட்டங்கள் ரத்து செய்தது பற்றி கேட்டதற்கு மக்கள் உயிருடன் விளையாட கூடாது. கொரோனா காலத்தில் நோய் தொற்றை தவிர்ப்பதற்காக கிராம சபை கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டதாகவும் இதுகுறித்து கவலைப்படாத தலைவர்கள் தான் தமிழ்நாட்டில் குறைகூறி பேசுகின்றனர் என்றார். இதில் மயிலாடுதுறை அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் வி.ஜி.கே.செந்தில்நாதன், செம்பனார்கோவில் செம்பை வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் சுந்தர்ராஜன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் கபடி பாண்டியன், டீ.மணல்மேடு ஊராட்சி மன்ற தலைவர் திலகவதி துரைராஜன், காலமநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் நடராஜன், நாகை வேளாண்மை துறை இயக்குனர் பன்னீர்செல்வம், வேளாண்மை உதவி இயக்குனர் தாமஸ், திருக்கடையூர் அரசு விதைப் பண்ணை மேலாளர் குமரன் மற்றும் வேளாண் துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்