அரியலூர், செந்துறை பகுதிகளுக்கு 9 ஆண்டுகளாக முழுமையாக செயல்பாட்டுக்கு வராத கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டம் - சீரமைப்பு பணியால் தண்ணீர் கிடைக்கும் என பொதுமக்கள் எதிர்பார்ப்பு

அரியலூர், செந்துறை பகுதிகளுக்கு 9 ஆண்டுகளாக முழுமையாக கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்பாட்டுக்கு வரவில்லை. தற்போது நடைபெறும் சீரமைப்பு பணியால் தண்ணீர் கிடைக்கும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Update: 2020-10-05 04:59 GMT
செந்துறை,

அரியலூர் மாவட்டத்தில் அடிக்கடி குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அரியலூர் மற்றும் செந்துறை ஒன்றியங்கள், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஆலத்தியூர் மற்றும் வேப்பூர் ஒன்றியங்களில் உள்ள 645 கிராமங்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக 2009-ம் ஆண்டு தமிழக அரசு 218 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டத்தை அறிவித்தது. அதன்படி திருமானூர் அருகே உள்ள திருமழபாடி கொள்ளிடம் ஆற்றில் ஆழ்துளை கிணறு அமைத்து குழாய் வழியாக இப்பகுதி கிராமங்களுக்கு குடிநீர் வழங்க திட்டமிடப்பட்டது.

இதைத்தொடர்ந்து அடிக்கல் நாட்டப்பட்டு, கட்டுமான பணிகள் நிறைவடைந்து 2011-ம் ஆண்டு அந்த திட்டம் பயன்பாட்டுக்கு வந்தது. இதில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஆலத்தியூர் மற்றும் வேப்பூர் ஒன்றியங்களில் பெருமளவில் வெற்றிகரமாக மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. ஆனால் அரியலூர் மற்றும் செந்துறை பகுதியில் இந்த திட்டம் முழுமையாக செயல்பாட்டுக்கு வரவில்லை. ஆங்காங்கே குழாய்களில் உடைப்பு மற்றும் உரிய பராமரிப்பு இல்லாமல் இந்த திட்டம் தோல்வி அடைந்தது. இதனால் 9 ஆண்டுகளாகியும் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

இந்த நிலையில் தமிழக அரசு சமீபத்தில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படாத பகுதிகளில் குழாய்களை பழுது நீக்கி செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்காக சுரங்க நிதியில் இருந்து ரூ.5.32 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. இதைத்தொடர்ந்து கடந்த சில மாதங்களாக 90 கி.மீ. குழாய்கள் பழுது நீக்கம் மற்றும் நீரேற்றும் நிலையங்களை பழுது நீக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் சென்னையில் இருந்து வந்த சுரங்கம் மற்றும் கனிமவள இயக்குனரும், அரியலூர் மாவட்ட கண்காணிப்பு அதிகாரியுமான சரவணவேல்ராஜ், அந்த பணிகளை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அவர் அரியலூர், ராயம்புரம், செந்துறை, நக்கம்பாடி ஆகிய இடங்களில் நடைபெறும் பணிகளை ஆய்வு செய்தார். அவரிடம் குடிநீர் வடிகால் வாரிய பொறியாளர்கள் திட்டத்தின் வரைபடத்தை காண்பித்து விளக்கம் அளித்தனர். அப்போது அவர், ராயம்புரம் வரை தண்ணீர் வருவதாக சொல்கிறீர்கள், அதனைத் தொடர்ந்து செந்துறை செல்லும் பாதைகளை சீரமைத்து படிப்படியாக தண்ணீரை கொண்டு செல்லாமல் கடைசி பகுதியில் உள்ள நக்கம்பாடி பகுதியில் சீரமைப்பு பணிகளை ஏன் மேற்கொள்கிறீர்கள்? என்று கேள்வி எழுப்பினார். அத்துடன் 15 நாட்களில் 50 கி.மீ. தூரத்திற்கான குடிநீர் குழாய்களை சீரமைத்து சோதனை செய்ய வேண்டும். ஒரு மாதத்தில் 50 கி.மீ. தொலைவில் உள்ள கிராமங்களுக்கு கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் தட்டுப்பாடு இன்றி கிடைக்க வேண்டும், என்று கூறினார்.

இந்த திட்டம் முழுமையாக நிறைவடையும் வரை மாதம் ஒருமுறை ஆய்வுக்கு வருவேன் என்றும் தெரிவித்தார். மாவட்ட கண்காணிப்பு அதிகாரியின் இந்த அதிரடி ஆய்வை கண்ட செந்துறை பகுதி பொதுமக்கள், சீரமைப்பு பணிகள் மற்றும் அதிகாரிகளின் ஆய்வால் விரைவில் தங்களுக்கு தண்ணீர் கிடைக்கும் என்று எதிர் பார்ப்புடன் தெரிவித்தனர். ஆய்வின்போது, அரியலூர் கலெக்டர் ரத்னா, திட்ட இயக்குனர் சுந்தரராஜன், உடையார்பாளையம் கோட்டாட்சியர் பூங்கோதை மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் உடனிருந்தனர்

மேலும் செய்திகள்