பின்னோக்கி வந்த கார் மோதி ஆட்டோ டிரைவர் பலி; காரை அடித்து நொறுக்கிய பொதுமக்கள்

பின்னோக்கி வந்த கார் மோதியதில் ஆட்டோ டிரைவர் பலியானார். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், கார் டிரைவரை அடித்து உதைத்ததுடன், காரையும் அடித்து நொறுக்கினர்.

Update: 2020-10-04 23:52 GMT
திரு.வி.க.நகர்,

சென்னை புளியந்தோப்பு நாச்சாரம்மன் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த் (வயது 58). ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி காளியம்மாள். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். நேற்று மாலை ஆனந்த், தனது நண்பரான சுரேஷ் என்பவருடன் வீட்டின் வெளியே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது வேகமாக வந்த கார் ஒன்று, அவர்கள் அருகில் வந்து நின்றது. திடீரென அந்த கார் பின்னோக்கி வேகமாக வந்தது.

அப்போது எதிர்பாராதவிதமாக அங்கு அமர்ந்து இருந்த ஆனந்த் மீது கார் மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர், அதே இடத்தில் துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அங்கிருந்த பொதுமக்கள், கார் டிரைவர் ஜாகீர் என்பவரை சரமாரியாக அடித்து உதைத்தனர். மேலும் ஆட்டோ டிரைவர் ஆனந்தின் உயிரை பறித்த காரையும் அடித்து நொறுக்கினர்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த புளியந்தோப்பு போலீசார், பொதுமக்கள் தாக்கியதில் காயம் அடைந்த ஜாகீரை மீட்டு ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் பலியான ஆனந்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவம் தொடர்பாக கீழ்ப்பாக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்