நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் ஒரே நாளில் 164 பேருக்கு கொரோனா

நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் ஒரே நாளில் 164 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

Update: 2020-10-04 23:11 GMT
தென்காசி,

நெல்லை மாவட்டத்தில் நேற்று 76 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் நெல்லை மாநகர பகுதியை சேர்ந்தவர்கள் 27 பேர். பாளையங்கோட்டை யூனியன் பகுதியை சேர்ந்தவர்கள் 8 பேர்.

ஏர்வாடியில் உள்ள முதியோர் காப்பகத்தில் நேற்று முன்தினம் 24 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இந்த நிலையில் மேலும் 30 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் 60 வயது முதல் 90 வயது உடையவர்கள். பாதிக்கப்பட்ட முதியவர்கள் நெல்லை அரசு ஆஸ்பத்திரியிலும், மூன்றடைப்பில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்திலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை தனிமைப்படுத்தி டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதற்கிடையில் நெல்லை மாவட்ட சுகாதார துறை துணை இயக்குனர் வரதராஜன், ஏர்வாடியில் உள்ள முதியோர் காப்பகத்திற்கு சென்று ஆய்வு செய்தார். அப்பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட அனைவரும் முதியோர்கள் என்பதால் கூடுதல் கண்காணிப்பில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர மானூர், நாங்குநேரி, பாப்பாக்குடி, ராதாபுரம், வள்ளியூர், சேரன்மாதேவி, களக்காடு ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 13 ஆயிரத்து 23 ஆக உயர்ந்துள்ளது.

தென்காசி- தூத்துக்குடி

தென்காசி மாவட்டத்தில் 35 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது. அவர்கள் தென்காசி, செங்கோட்டை, ஆலங்குளம், கடையம், கடையநல்லூர், வாசுதேவநல்லூர் உள்ளிட்ட பகுதியை சேர்ந்தவர்கள். தொற்று பாதிக்கப்பட்டவர்களின் வீட்டை சுற்றி கிருமி நாசினி தெளிக்கப்பட்டு உள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மாவட்டத்தில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 7 ஆயிரத்து 483 ஆக உயர்ந்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று 53 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் இந்த மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 13 ஆயிரத்து 698 ஆக உயர்ந்து உள்ளது. அதேபோன்று 13 ஆயிரத்து 31 பேர் முழுமையாக குணமடைந்து உள்ளனர். 544 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனாவால் இறந்தவர்கள் எண்ணிக்கை 123 ஆக உள்ளது.

மேலும் செய்திகள்