சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் இளம் பெண் தூக்குப்போட்டு தற்கொலை

சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளம்பெண் திடீரென்று கழிப்பறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2020-10-04 23:06 GMT
சங்கரன்கோவில்,

சங்கரன்கோவில் அருகே உள்ள நெல்கட்டும்செவல் கிராமத்தை சேர்ந்தவர் குருசாமி. தொழிலாளி. இவரது மனைவி வெள்ளத்தாய்(வயது 22). உறவினரான இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில் வெள்ளத்தாய் கர்ப்பமானார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதாகவும், குடும்பத்தினர் வீட்டில் வைத்து பிரசவம் பார்த்ததாக கூறப்படுகிறது. பெண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில் வெள்ளத்தாய்க்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. சிகிச்சைக்காக வெள்ளத்தாய் வாசுதேவநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றார். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின், மேல் சிகிச்சைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு துணையாக அவரின் தாய் மூக்கம்மாள் உடனிருந்து கவனித்து வந்துள்ளார்.

கழிப்பறையில் தற்கொலை

இந்நிலையில் நேற்று மருத்துவமனை வளாகத்திலுள்ள கழிப்பறைக்கு சென்ற வெள்ளத்தாய் வெகுநேரமாகியும் திரும்பி வரவில்லை. இதனால் அவரது தாயார் தேடிச் சென்று பார்த்தபோது, வெள்ளத்தாய் கழிப்பறையில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மகளின் உடலை பார்த்து மூக்கம்மாள் கதறி துடித்தார். இந்த சம்பவத்தினால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து வந்த சங்கரன்கோவில் டவுன் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.

உதவி கலெக்டர் விசாரணை

அவரது தற்கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இதுகுறித்து டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் வெள்ளத்தாய்க்கு திருமணம் ஆகி மூன்று ஆண்டுகளே ஆவதால், சங்கரன்கோவில் உதவி கலெக்டர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

குழந்தை பிறந்து சில நாட்களே ஆகியுள்ள நிலையில் இளம்பெண் அரசு மருத்துவமனையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்