அழுது நாடகமாடும் குமாரசாமி ஜனதா தளம்(எஸ்) சொந்த பலத்தில் ஆட்சி அமைக்க முடியாது சித்தராமையா கடும் தாக்கு

ஜனதா தளம்(எஸ்) சொந்த பலத்தில் ஆட்சி அமைக்க முடியாது என்று சித்தராமையா கடுமையாக தாக்கி பேசினார்.;

Update: 2020-10-04 21:55 GMT
பெங்களூரு,

மாற்றுக்கட்சியினர் ஏராளமானவர்கள் பெங்களூருவில் நேற்று மாநில காங்கிரஸ் தலைவர் டி.கேசிவக்குமார் முன்னிலையில் காங்கிரசில் சேர்ந்தனர். பின்னர் கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடகத்தின் மொத்த கடன் ரூ.4.4 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. மாநிலத்தில் பா.ஜனதா அரசு வருவதற்கு முன்பு கடன் ரூ.2.38 லட்சம் கோடியாக இருந்தது. கடந்த 16 மாதங்களில் எடியூரப்பா ரூ.1.5 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளார். மாநில அரசு ஆண்டுக்கு கடனுக்கான வட்டியாக ரூ.23 ஆயிரம் கோடி செலுத்துகிறது. மாநிலத்தில் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. நான் 5 ஆண்டுகள் ஆட்சி நிர்வாகத்தை நடத்தினேன். இவ்வளவு அதிகமான ஊழலை நான் பார்க்கவில்லை.

மகிழ்ச்சி அளிக்கிறது

எடியூரப்பா ஆட்சியில் அரசு பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய 10 சதவீதம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு மந்திரி 10 சதவீதம் லஞ்சம் வாங்கிக் கொண்டு ஒப்பந்ததாரருக்கு நிதி விடுவித்துள்ளார். அந்த மந்திரியே வெட்கம் இல்லாமல் இதை என்னிடம் கூறினார். கர்நாடக மேல்-சபையில் காலியாக உள்ள 4 இடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் கர்நாடக சட்டசபையில் காலியாக இருக்கும் 2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்கிறது.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 14 எம்.எல்.ஏ.க்கள், ஜனதா தளம்(எஸ்) கட்சியை சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்களுக்கு எடியூரப்பா தலா ரூ.25 கோடி கொடுத்து எடியூரப்பா கர்நாடகத்தில் ஆட்சி அமைத்தார். எடியூரப்பா குறுக்கு வழியில் ஆட்சிக்கு வந்துள்ளார். அந்த 17 எம்.எல்.ஏ.க்களில் முனிரத்னாவும் ஒருவர். பிற கட்சிகளை சேர்ந்த ஏராளமானவர்கள் எங்கள் கட்சிக்கு வந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. கர்நாடகத்தில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரும். எனது தலைமையில் நடந்த ஆட்சியில் செய்த பணிகளை போல் வேறு எந்த ஆட்சியிலும் நடக்கவில்லை.

மயங்கிவிடக்கூடாது

எங்கள் அரசு அன்னபாக்கிய திட்டத்தை அமல்படுத்தியது. இந்த திட்டம் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால், கொரோனா ஊரடங்கு காலத்தில் எத்தனையோ பேர் பசியால் இறந்திருப்பார்கள். பா.ஜனதா அரசு திவாலாகிவிட்டது. அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க நிதி இல்லை. சமூக நலத்திட்டங்களின் கீழ் ஓய்வூதியம் கொடுக்கவில்லை. இதை அரசு என்று அழைக்க வேண்டுமா?. அதனால் வருகிற இடைத்தேர்தலில் பா.ஜனதா மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகளை மக்கள் தோற்கடிப்பார்கள். இந்த இடைத்தேர்தல் முடிவு, அடுத்த வரக்கூடிய சட்டமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக அமையும்.

ஜனதா தளம்(எஸ்) கட்சி எக்காரணம் கொண்டும், சொந்த பலத்தில் ஆட்சி அமைக்க முடியாது. இன்னொருவரின் முதுகில் அமர்ந்து ஆட்சி செய்வது அக்கட்சியின் வழக்கம். சிராவுக்கு சென்று குமாரசாமி நிர்வாகிகள் மத்தியில் அழுதுள்ளார். இது அரசியல். மக்களை உணர்ச்சிப்பூர்வமாக தூண்டக்கூடாது. குமாரசாமியின் இத்தகைய நாடகங்கள் அதிகளவில் நடக்கிறது. இதையெல்லாம் கண்டு மக்கள் மயங்கிவிடக்கூடாது. தேவேகவுடா காலத்தில் இருந்தும் நாடகங்கள் நடந்து கொண்டே இருக்கின்றன. இதை மக்கள் பொருட்படுத்தக்கூடாது.

மக்கள் ஆதரிக்கக்கூடாது

மக்கள் பணி ஆற்றுபவர்களை அடையாளம் காண வேண்டும். முன்னாள் மந்திரி டி.பி.ஜெயச்சந்திரா அதிக பணிகளை செய்தார். ஆனால் அவரை தோற்கடித்தனர். என்னை சாமுண்டீஸ்வரி தொகுதியில் தோற்கடித்தனர். பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சாதி பெயரை சொல்லி வருபவர்களை மக்கள் ஆதரிக்கக்கூடாது. ஜனதா தளம்(எஸ்) ஒரு கட்சியே அல்ல. அது ஆட்டத்திற்கு உண்டு, கணக்கில் கிடையாது என்பதை போன்றது. சில நேரங்களில் அக்கட்சியினர் ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டுவிடுகிறார்கள்.

இவ்வாற சித்தராமையா பேசினார்.

மேலும் செய்திகள்