தசரா யானைகளுக்கு கொரோனா பரிசோதனை எப்போது? வனத்துறை அதிகாரி விளக்கம்

மைசூரு தசரா விழாவில் கலந்துகொள்ள வந்துள்ள யானைகளுக்கு கொரோனா பரிசோதனை எப்போது நடத்தப்படும் என்பது குறித்து வனத்துறை அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.

Update: 2020-10-04 21:44 GMT
பெங்களூரு,

மைசூருவில் ஆண்டுதோறும் விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு 10 நாட்கள் உலகப் புகழ்பெற்ற தசரா விழா நடத்தப்பட்டு வருகிறது. அதுபோல் இந்த ஆண்டு வருகிற 17-ந்தேதி தொடங்கி 26-ந்தேதி வரை தசரா விழா நடத்தப்படுகிறது. ஆனால் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், இந்த ஆண்டு தசரா விழா எளிமையாக நடத்தப்படுகிறது. தசரா விழாவையொட்டி நடைபெறும் ஜம்பு சவாரி ஊர்வலமும் எளிமையாக அரண்மனை வளாகத்திலேயே நடத்தப்படுகிறது.

இதற்காக அபிமன்யு உள்பட 5 யானைகள் மைசூருவுக்கு அழைத்துவரப்பட்டு உள்ளன. மைசூரு அரண்மனையில் தங்க வைக்கப்பட்டு உள்ள யானைகளுக்கு நடைபயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் யானை பாகன்கள், பராமரிப்பாளர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. ஆன்டிஜென் கருவி மூலம் நடந்தது. மொத்தம் 19 பேருக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டது. இதில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்பது தெரியவந்து உள்ளது.

யானைகளுக்குபரிசோதனை எப்போது?

இதுகுறித்து மைசூரு மாவட்ட வன பாதுகாவலர் எம்.ஜே.அலெக்சாண்டர் கூறியதாவது:-

தசரா யானைகளின் பாகன்கள், பராமரிப்பாளர்கள் உள்பட 19 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை. பாகன்கள், பராமரிப்பாளர்கள் அரண்மனையை விட்டு வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அதுபோல் அரண்மனை வளாகத்திலேயே யானைகளுக்கு நடைபயிற்சி அளிக்கப்படும்.

தசரா யானைகளுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படுமா என்ற கேள்வி எழுந்து வருகிறது. இதற்காக கொரோனா பரிசோதனை கருவிகளை வழங்கும்படி கர்நாடக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம். இப்போதைக்கு தசரா யானைகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படாது. ஒரு வேளை உடல் நலக்குறைவு ஏற்பட்டால், யானைகளுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்