விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 123 பேருக்கு கொரோனா
விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 123 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 11,910 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 98 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். நோய் பாதிப்பில் இருந்து 10,924 பேர் குணமடைந்துள்ள நிலையில் மீதமுள்ள 888 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களில் நேற்று 400-க்கும் மேற்பட்டோரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் கிடைக்கப்பெற்றது. இதில் ரோஷணை போலீஸ் இன்ஸ்பெக்டர், திண்டிவனம் அரசு மருத்துவமனை டாக்டர், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை ஊழியர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக ஊழியர், விழுப்புரம் வணிக வரித்துறை அலுவலக ஊழியர், கண்டமானடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர், விழுப்புரம் ஆயுதப்படை போலீஸ்காரர், மரக்காணம் போலீஸ் ஏட்டு, திண்டிவனம் தீயணைப்பு வீரர் உள்ளிட்ட மேலும் 73 பேருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதன் மூலம் மாவட்டத்தில் இதுவரை கொரோனா நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 11,983 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் நோய் பாதிப்பில் இருந்து 158 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம் குணமடைந்தோரின் எண்ணிக்கை 11,082 ஆக உயர்ந்துள்ளது. இதுதவிர கொரோனா முன்னெச்சரிக்கை தொடர்பாக 1,611 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏற்கனவே 9,289 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 8,885 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 97 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் 1,570 பேரின் கொரோனா பரிசோதனை முடிவு நேற்று வெளியானது. இதில் 50 பேருக்கு தொற்று உறுதியானது. இதையடுத்து மொத்த பாதிப்பு 9,339 ஆக உயர்ந்துள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்ட அனைவரும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.