கோடியக்கரை சரணாலயத்திற்கு வரத்தொடங்கிய வெளிநாட்டு பறவைகள் - இனி 6 மாதங்கள் சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்து கிடைக்கும்
கோடியக்கரை சரணாலயத்திற்கு வெளிநாட்டு பறவைகள் வரத்தொடங்கி உள்ளன. இனி 6 மாதங்களுக்கு சரணாலயம் வரும் சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு இந்த பறவைகள் விருந்து படைக்க உள்ளன.
வேதாரண்யம்,
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கோடியக்கரையில் பறவைகள் சரணாலயம் அமைந்து உள்ளது. ஆர்க்டிக் பிரதேசங்களில் நிலவும் கடும் குளிரைப் போக்கவும், உணவுக்காகவும் அங்குள்ள பறவைகள் கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கில் வருகின்றன.
ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலம் தொடங்கும் அக்டோபர் மாதம் முதல் கோடைக்காலம் தொடங்கும் மார்ச் மாதம் வரை இந்த பறவைகள் இங்கு தங்கியிருக்கும். பின்னர் தங்கள் சொந்த நாடுகளுக்கே திரும்பிச் செல்வது வழக்கம்.
இதில் கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு சைபீரியா, ஈரான், ஈராக் நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கில் வரும் நான்கு அடி உயரமுள்ள அழகுமிகு பூநாரை(பிளமிங்கோ) கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு தனிச் சிறப்பு சேர்க்கும். மேலும் கொசுஉள்ளான், கூழைக்கிடா, லடாக்கில் இருந்து வரும் சிவப்பு கால் உள்ளான், ஆஸ்திரேலியாவில் இருந்து வரும் வரித்தலை வாத்து, உள்நாட்டு பறவைகளான செங்கால்நாரை, பர்மாவில் இருந்து வரும் சிறவி வகைகள், இலங்கையில் இருந்து வரும் கடல் காகம், ஆர்க்டிக் பிரதேசத்தில் இருந்து வருகை தரும் ஆர்க்டிக்டேன்(ஆலா) இமாச்சல பிரதேசத்தில் இருந்து வரும் இன்டியன் பிட்டா(காச்சலாத்தி) உள்ளான் வகைப் பறவைகள் என 247 வகையான பறவைகள் இங்கு வந்து செல்கின்றன.
இங்கு வரும் 247 வகையான பறவைகளில் 50 வகையான நிலப்பறவைகளும், 200-க்கும் மேற்பட்ட நீர்ப்பறவைகளும் ஆண்டுதோறும் சீசன் காலங்களில் வருகிறது. இப்படி வந்து செல்லும் பறவைகளில் உள்ளான் வகையான ஆலா மற்றும் கிரீன்சான்ங், சாங்க்பிளவர் உள்ளிட்ட 6 வகையான பறவைகள் மட்டுமே இங்கு முட்டையிட்டு குஞ்சு பொரித்து செல்லும்.
மற்ற அனைத்து பறவைகளும் சீசன் காலத்தில் தங்கி மட்டுமே செல்லும். சைபீரியாவில் இருந்து இங்கு வருகை தரும் ஆலா பறவைகள் இங்கு வந்து முட்டையிட்டு குஞ்சு பொரித்தவுடன் முதலாவதாக குஞ்சு பறவை தன்னுடைய சொந்த நாட்டிற்கு இயற்கையின் உள்தூண்டுதலால் முதலில் செல்லும்.
பறவை ஆராய்ச்சியில் 41 ஆண்டு காலம் இந்த பகுதியில் ஈடுபட்டு வரும் மும்பை பறவை ஆராய்ச்சி கழகத்தினர், பறவைகள் வாழ்வதற்கு ஏற்ற இடம் கோடியக்கரை என்று தெரிவித்தனர். இந்திய அரசால் கோடியக்கரையை ‘ராம்சார் சைட்’ என அறிவித்துள்ளது என்று 1976-ம் ஆண்டு முதல் இந்த பகுதியில் பறவைகளை ஆராய்ச்சி செய்து அதன் கால்களில் வளையமிடும் பணியை மேற்கொண்டுவரும் மும்பை பறவை ஆராய்ச்சி விஞ்ஞானி தெரிவித்தார்.
காடும் காடு சார்ந்த பகுதியும், கடலும் கடல் சார்ந்த பகுதியும் ஒருங்கே அமையப்பெற்றுள்ள கோடியக்கரையில் வனவிலங்கு சரணாலயமும், பறவைகள் சரணாலயமும் ஒன்றாக அமைந்துள்ளது. சுற்றுலா பயணிகள் இந்த சரணாலயத்தை காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் 6 மணி வரையிலும் பார்வையிட்டு வந்தனர்.
சுற்றுலா பயணிகள் வந்து தங்குவதற்கு வனத்துறையினர் தங்குமிடமும், உணவும், சுற்றிப்பார்ப்பதற்கு வழிகாட்டியும் ஏற்பாடு செய்கின்றனர். மேலும் பறவைகளை காணுவதற்கு பைனாகுலர் மற்றும் பார்வையிடுவதற்கான உயர் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளன. படகு மூலம் சென்றும் பறவைகளை பார்வையிடலாம்.
பறவைகள் மற்றும் வனவிலங்குகளின் சொர்க்க பூமியாக திகழும் இந்த கோடியக்கரையில் ஆயிரக்கணக்கான மான்கள் துள்ளித்திரிவதும் கூட்டம், கூட்டமாக பறவைகள் சுற்றித்திரிவதும் கண்கொள்ளா காட்சியாகும். தற்போது கொரோனா பரவலின் காரணமாக பறவைகள் சரணாலயம் மற்றும் வனவிலங்கு சரணாலயங்களை சுற்றுலா பயணிகள் பார்வையிட அரசு தடை விதித்துள்ளது. தடை நீங்கிய பின்பு பறவைகளின் அழகை கண்டு களிக்கலாம்.
இது குறித்து மும்பை பறவை ஆராய்ச்சி விஞ்ஞானி பாலச்சந்திரன் கூறியதாவது:-
தற்போது கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு செங்கால் நாரை, கூழைக்கடா, கடல் ஆலா ஆகியவை ஓரளவு வந்துள்ளது. பருவமழை நன்றாக இருந்தால் பறவைகள் வரத்து அதிகமாக இருக்கும் என்றார்.