குமாரபாளையத்தில், அரசு பள்ளி தலைமை ஆசிரியையிடம் ரூ.1 லட்சம் திருட்டு - வாலிபருக்கு போலீஸ் வலைவீச்சு

குமாரபாளையத்தில் அரசு பள்ளி தலைமை ஆசிரியையிடம் ரூ.1 லட்சம் திருடிய வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.;

Update: 2020-10-04 13:45 GMT
குமாரபாளையம்,

குமாரபாளையம் அருகே உள்ள தட்டங்குட்டை ஊராட்சி ஜெய்ஹிந்த் நகரில் வசித்து வருபவர் தேவசகாயம். இவரது மனைவி தனலட்சுமி. இவர் ஓலப்பாளையம் அரசு தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். நேற்று காலை தனலட்சுமியும், அவரது கணவர் தேவசகாயமும் குமாரபாளையத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றிற்கு சென்றனர். பின்னர் அங்கு ரூ.1 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு மொபட்டில் கிளம்பினர்.

இதையடுத்து அங்குள்ள எல்.ஐ.சி. அலுவலகத்தில் தவணைத்தொகை கட்டுவதற்காக தேவசகாயம் சென்றார். ரூ.1 லட்சம் பணத்தை தனலட்சுமி தனது கைப்பையில் வைத்திருந்தார். கணவர் வர நேரமானதால், தனலட்சுமி எல்.ஐ.சி. அலுவலகத்தின் படிக்கட்டில் அமர்ந்திருந்தார். பின்னர் தேவசகாயம் வந்தவுடன், அவர்கள் 2 பேரும் வீட்டிற்கு திரும்பினர்.

வீட்டிற்கு சென்று பார்த்தபோது, தனலட்சுமியின் கைப்பையில் இருந்த பணத்தை காணவில்லை. இதனால் பதறிய அவர்கள், உடனே இதுதொடர்பாக குமாரபாளையம் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவி மற்றும் போலீசார் எல்.ஐ.சி. அலுவலகம் சென்று, அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர்.

அப்போது வாலிபர் ஒருவர் படிக்கட்டில் அமர்ந்திருந்த தனலட்சுமியின் கவனத்தை திசைத்திருப்பி, அவரது கைப்பையில் வைத்திருந்த ரூ.1 லட்சம் பணத்தை திருடிச்சென்றது தெரியவந்தது. ஆனால் கேமராவில் வாலிபரின் முகம் தெளிவாக பதிவாகவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமை ஆசிரியையிடம் பணத்தை திருடிச்சென்ற வாலிபரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்