மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பேர் பலி - 75 பேருக்கு தொற்று

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பேர் பலியானார்கள். மேலும் நேற்று ஒரே நாளில் 75 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.;

Update: 2020-10-04 13:15 GMT
கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. அந்த வகையில் கொரோனாவுக்கு 2 பேர் பலியாகி உள்ளனர். அதன்படி கிருஷ்ணகிரியைச் சேர்ந்த 40 வயது ஆண் காய்ச்சல், இருமல், மூச்சு திணறலால் அவதிப்பட்டார். அவர் கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நடத்திய பரிசோதனையில் கொரோனா உறுதி செய்யப்பட்டது. அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் அவர் இறந்து விட்டார்.

கிருஷ்ணகிரி பகுதியைச் சேர்ந்தவர் 72 வயது முதியவர் காய்ச்சல், இருமல், மூச்சு திணறல் பிரச்சினைகளுடன் வேலூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு நடத்திய பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. அங்கு தீவிர சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் இறந்தார். இதனால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது.

இதற்கிடையே கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 75 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து தமிழக சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவால் 75 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் மாவட்டத்தில் 4 ஆயிரத்து 850 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதில் 3 ஆயிரத்து 976 பேர் சிகிச்சை முடிந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளார்கள். 808 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். 66 பேர் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 58 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்