கார் மோதிய விபத்தில் கோமாவில் இருக்கும் வியாபாரி குடும்பத்துக்கு ரூ.60 லட்சம் இழப்பீடு - மக்கள் நீதிமன்ற நிகழ்ச்சியில் நீதிபதி வழங்கினார்
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் சிக்கி 2 ஆண்டுகளாக கோமாவில் இருக்கும் வியாபாரி குடும்பத்துக்கு ரூ.60 லட்சம் இழப்பீட்டுத் தொகைக்கான காசோலையை மக்கள் நீதிமன்ற நிகழ்ச்சியில் மதுரை மாவட்ட நீதிபதி வழங்கினார்.
மதுரை,
கொரோனா வைரஸ் பீதியின் காரணமாக கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதியில் இருந்து செப்டம்பர் மாதம் வரை கோர்ட்டுகள் முழுமையாக செயல்படவில்லை. அதேபோல லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றமும் கடந்த 6 மாதத்துக்கும் மேலாக ஒத்திவைக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் நேற்று மதுரை மாவட்ட கோர்ட்டில் மக்கள் நீதிமன்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மாவட்ட முதன்மை நீதிபதி நஸிமாபானு தலைமையிலான இந்த மக்கள் நீதிமன்றத்தில் மொத்தம் 380 வழக்குகள் சுமுக தீர்வு காண்பதற்காக எடுத்துக் கொள்ளப்பட்டன. முடிவில் மொத்தம் 218 வழக்குகளுக்கு சுமூக தீர்வு காணப்பட்டன.
இதன்மூலம் பயனாளிகளுக்கு இழப்பீடாக ரூ.2 கோடியே 50 லட்சத்து 2 ஆயிரத்து 700 வழங்கப்பட்டது. இதில் முக்கியமான ஒரு வழக்கிற்கும் சுமூக தீர்வு காணப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-
விருதுநகரை சேர்ந்தவர் ராமர்(வயது 50) . விருதுநகரில் பரிசுப்பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வந்தார். இவரது மனைவி சுதா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கடந்த 2016-ம் ஆண்டில் மதுரையில் இருந்து பரிசுப்பொருட்களை வாங்கிக்கொண்டு மோட்டார் சைக்கிளில் விருதுநகர் சென்றார். கள்ளிக்குடி அருகே சென்றபோது ராமர் சென்ற மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியது. இதில் ராமரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு கோமா நிலைக்கு சென்றார். உடனயாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் தற்போது வரை கோமாவில் தான் உள்ளார்.
இதற்கிடையே விபத்தில் சிக்கி ராமர் கோமா நிலைக்கு சென்றதால், அவருக்கு உரிய இழப்பீட்டை வழங்க உத்தரவிடும்படி குடும்பத்தினர் சார்பில் மதுரை மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. ராமரின் மனைவி தாக்கல் செய்த வழக்கில், தனது கணவரை சார்ந்து தான் நான், எனது 2 மகன்களும் இருந்தோம். இப்போது வாழ்வாதாரம் இழந்து தவிக்கிறோம். எனவே எங்களுக்கு ரூ.80 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த வழக்கை மக்கள் நீதிமன்றத்தில் சுமூக தீர்வு காண்பதற்காக பரிந்துரை செய்யப்பட்டது.
அதன்படி நேற்று நடந்த மக்கள் நீதிமன்றத்தில் சுதாவின் வழக்கு விசாரிக்கப்பட்டது. முடிவில், ராமர் குடும்பத்துக்கு ரூ.60 லட்சம் இழப்பீட்டு தொகையை வழங்குவதாக இன்சூரன்சு நிறுவனம் தெரிவித்தது. இதை சுதா மற்றும் அவரது குடும்பத்தினரும் ஏற்பதாக சம்மதம் தெரிவித்தனர்.
இதையடுத்து இன்சூரன்ஸ் நிறுவனம் அளித்த ரூ.60 லட்சத்துக்கான காசோலையை சுதாவிடம், மதுரை மாவட்ட முதன்மை நீதிபதி நஸிமாபானு வழங்கினார். அப்போது மதுரை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் தீபா, மக்கள் நீதிமன்ற தலைவர் கிருபாகரன்மதுரம், லஞ்ச ஒழிப்பு கோர்ட்டு நீதிபதி வடிவேல் உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.