காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்தால் விவசாயிகளின் வாழ்க்கை தரம் உயரும் அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சு

புதுக்கோட்டை மாவட்ட மக்களின் பல ஆண்டுகால கோரிக்கையினை ஏற்று காவிரி -வைகை- குண்டாறு இணைப்புத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

Update: 2020-10-04 05:51 GMT
ஆவூர்,

விராலிமலை ஊராட்சி ஒன்றியம், ஆவூரில் ரூ.20 லட்சத்தில் புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா கலெக்டர் உமாமகேஸ்வரி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சந்தோஷ்குமார், இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் டெய்சிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்து பேசும்போது, புதுக்கோட்டை மாவட்ட மக்களின் பல ஆண்டுகால கோரிக்கையினை ஏற்று காவிரி -வைகை- குண்டாறு இணைப்புத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் முதல்கட்ட பணிகளுக்கு ரூ.700 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த இணைப்புத் திட்டம் நிறைவேற்றப்படும்பொழுது புதுக்கோட்டை மாவட்டம் செழிப்பான மாவட்டமாக மாறுவதுடன் வேளாண் உற்பத்தி பெருகி விவசாயிகளின் வாழ்க்கை தரும் உயரும். மேலும் இப்பகுதி பொதுமக்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார். விழாவில் விராலிமலை ஒன்றிய குழுத்தலைவர் காமு மு.பி.மணி, அ.தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் திருமூர்த்தி, தொழிலதிபர் எஸ்.டி.எஸ். டேவிட், ஊராட்சி மன்ற தலைவர் கலைச்செல்வி பொன்னுச்சாமி, துணைத்தலைவர் எலிசா செபஸ்தியான், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதேபோல் விராலிமலை தாலுகா கொடும்பாளூரில் மேம்படுத்தப்பட்ட 24 மணிநேர அவசர சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். மேலும் இலுப்பூரில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 108 ஆம்புலன்ஸ் வேலைவாய்ப்பு முகாம் நேற்று நடைபெற்றது. இந்த முகாமையும் அமைச்சர் தொடங்கி நிருபர்களிடம் கூறும்போது, 2 நாட்கள் நடைபெறும் 108 ஆம்புலன்ஸ் வேலைவாய்ப்பு முகாமில் 800 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்பு உள்ளது என்றார். தொடர்ந்து இலுப்பூர் அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஆய்வு நடத்தினார்.

மேலும் செய்திகள்