ஒடுகத்தூர் அருகே அதிகாலையில் பயங்கரம்: தந்தை-மகள் சரமாரி வெட்டிக்கொலை வாலிபர் கைது

ஒடுகத்தூர் அருகே வீடு புகுந்து தொழிலாளியையும் அவரது மகளையும் தங்கை மகனே வெட்டிக்கொலை செய்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-10-04 04:28 GMT
அணைக்கட்டு,

வேலூர் மாவட்டம் ஒடுகத்தூரையடுத்த ஜார்தான் கொல்லை அருகே உள்ள மலை கிராமமான கன்சிபுதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்னுசாமி (வயது 48). இவரது மனைவி பாஞ்சாலி (38). பொன்னுசாமி கடந்த 25 ஆண்டுகளாக வேப்பங்குப்பத்தில் உள்ள அன்சர்பாஷா என்பவரது நிலத்தில் தங்கி கூலி வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு ராஜேந்திரன் (26), ராஜேஷ் (18) என்ற 2 மகன்களும், தீபா (10)என்ற மகளும் உண்டு.

மகன்கள் இருவரும் கடந்த 5 ஆண்டுகளாக அன்சர் பாஷா நடத்திவரும் இறைச்சி கடையில் வேலை செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு பொன்னுசாமி, மனைவி பாஞ்சாலி மற்றும் மகள் தீபா ஆகியோர் உணவு சாப்பிட்டுவிட்டு வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்தனர். இந்த நிலையில் நேற்று அதிகாலை சுமார் 4 மணியளவில் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர் கத்தியால் பொன்னுசாமியின் கழுத்தில் வெட்டி உள்ளார். தந்தையின் அலறல் சத்தம் கேட்டு அருகில் படுத்திருந்த தீபா திடுக்கிட்டு எழுந்து பார்த்த போது அந்தநபர் கத்தியுடன் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் தனது தந்தை பொன்னுசாமி வெட்டப்பட்டு கிடப்பதை கண்டு கூச்சலிட்டு உள்ளார். ஆனால் இவர்களது வீடு விவசாய நிலத்தில் தனியாக இருப்பதால் தீபாவின் அலறல் சத்தம் யாருக்கும் கேட்க வில்லை.

இதனால் தீபா தனது தந்தையை காப்பாற்ற முயன்றுள்ளார் ஆத்திரமடைந்த அந்த நபர் தீபாவை, சிறுமி என்றும் பாராமல் தலை, கை உள்பட உடல் முழுவதும் சரமாரியாக வெட்டினார். கத்தி வெட்டில் படுகாயம் அடைந்த பொன்னுசாமி, தீபா இருவரும் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இதையடுத்து அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.

பாஞ்சாலி சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதால் தனது கணவர் மற்றும் மகள் கொல்லப்பட்டது கூட அறிந்து கொள்ள முடியாமல் இருந்துள்ளார். இந்த நிலையில் அருகே உள்ள கொய்யா தோட்டத்தை ஏலம் எடுத்த வியாபாரி நேற்று காலை கொய்யாப் பழங்களை பறிப்பதற்காக பொன்னுசாமியை அழைப்பதற்கு அவரது வீட்டிற்கு சென்றார். அப்போது அங்கு பொன்னுசாமி, தீபா ஆகியோர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனே அது குறித்து நிலத்தின் உரிமையாளரான அன்சர் பாஷாவுக்கு தகவல் கொடுத்தார். இதனையடுத்து அன்சர்பாஷா, வேப்பங்குப்பம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொன்னுசாமி, மகள் தீபா ஆகியோர் உடல்களை கைப்பற்றி விசாரணை நடத்தினர். பொன்னுசாமியின் மனைவி பாஞ்சாலி மனநிலை பாதிக்கப் பட்டுள்ளதால் என்ன நடந்தது என்பது குறித்து அவரால் சரியாக கூற முடியவில்லை.

இதையடுத்து போலீசார் மோப்ப நாயை வரவழைத்து கொலையாளி குறித்து துப்பு துலக்க மோப்பம் பிடிக்க விட்டனர். அது சிறிது தூரம் ஓடிவிட்டு நின்று விட்டது. கொலை நடந்த இடத்தில் தடயங்களை சேகரிக்க ஸ்ரீதர், லலிதா ஆகிய கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர் அவர்கள் தடயங்களை சேகரித்தனர்.

இரட்டை கொலை பற்றி அறிந்ததும் வேலூர் சரக போலீஸ் டி.ஐ.ஜி. காமினி மற்றும் போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அவர்களுடன் கூடுதல் சூப்பிரண்டு மதிவாணன், கூடுதல் துணை சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான், இன்ஸ்பெக்டர்கள் பாலசுப்பிரமணியம் கருணாகரன் பார்த்தசாரதி ஆகியோரும் சென்றனர்.

இந்த நிலையில் மகன் ராஜேந்திரன் அளித்த புகாரின்பேரில் பொன்னுசாமியின் தங்கை மகன் அண்ணாதுரையை (24) போலீசார் பிடித்து விசாரித்தனர். அவர் பொன்னுசாமியையும், தீபாவையும் கொன்றதை ஒப்புக்கொண்டார்.

அண்ணாதுரையின் வீடு ஒடுகத்தூர் அருகே உள்ள வரதலம்பட்டு கிராமத்தில் உள்ளது. அண்ணாதுரை சேலத்தில் ஒரு கம்பெனியில் தொழிலாளியாக வேலைபார்த்து வருகிறார். கடந்த 15 நாட்களாக வரதலம்பட்டில் வசிக்கும் அவரது தாயார் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். அவரை பார்ப்பதற்காக விடுப்பு எடுத்துக்கொண்டு அண்ணாதுரை சொந்த ஊருககு வந்தார். பின்னர் மாமாவான பொன்னுசாமி வீட்டிற்கு சென்ற அவர் ஏன் எனது தாயாரை யாருமே வந்து பார்க்கவிலை? என கேட்டுள்ளார் அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பொன்னுசாமியை வெட்டியதாகவும் தன்னை அடையாளம் கண்டுகொண்டதால் வெளியில் சொல்லி விடுவாள் என பயந்து தீபாவை வெட்டியதாகவும் அதில் 2 பேருமே இறந்து விட்டதாகவும் போலீசாரிடம் அண்ணாதுரை கூறியுள்ளார். இதனையடுத்து அண்ணாதுரையை போலீசார் கைது செய்தனர்.

இந்த இரட்டை கொலை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்