வேலூர் மாவட்டத்தில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் ரூ.2¼ கோடி இழப்பீடு வழங்க உத்தரவு

வேலூர் மாவட்டத்தில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 80 வழக்குகளில் ரூ.2 கோடியே 34 லட்சத்து 27 ஆயிரத்து 80 இழப்பீடு தொகையாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Update: 2020-10-04 04:23 GMT
வேலூர்,

தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும் மாவட்ட முதன்மை நீதிபதியுமான செல்வசுந்தரி தலைமை தாங்கினார்.

குடும்பநல நீதிபதி லதா, மக்கள் நீதிமன்ற தலைவர் அருணாசலம், போக்சோ சிறப்பு நீதிபதி செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மக்கள் நீதிமன்றத்தில் வாகன விபத்து, வங்கி வராக்கடன், நில மோசடி, தொழிலாளர் வழக்கு, குடும்ப நல வழக்கு, காசோலை மோசடி உள்பட பல்வேறு வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டன.

இதில், மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி பாலசுப்ரமணியன், கூடுதல் தொழிலாளர் நல தலைமை அதிகாரி மணிவண்ணன், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் அனிதா ஆனந்த், நிர்வாக அலுவலர் சதீஷ்ராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள 11 கோர்ட்டுகளில் நேற்று நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 390 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு அதில், 80 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டன. அதன் மூலம் ரூ.2 கோடியே 34 லட்சத்து 27 ஆயிரத்து 80 இழப்பீடாக சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்க உத்தரவிடப்பட்டது.

மக்கள் நீதிமன்றத்தில் கலந்து கொண்ட அனைவரும் முகக் கவசம் அணிந்திருந்தனர். இதற்கான ஏற்பாட்டை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செய்திருந்தது.

மேலும் செய்திகள்