ஜோலார்பேட்டை அருகே 3,000 ஆண்டுகளுக்கு முந்தைய புதிய கற்காலக் கருவிகள் கண்டெடுப்பு

ஜோலார்பேட்டையை அடுத்த அச்சமங்கலம் கிராமம் அருகே 3,000 ஆண்டுகளுக்கு முந்தைய புதிய கற்காலக் கருவிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

Update: 2020-10-04 03:54 GMT
ஜோலார்பேட்டை,

திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் ஆ.பிரபு, வரலாறு மற்றும் தொல்லியல் ஆய்வாளர் சேகர் மற்றும் ஆய்வு மாணவர்கள் சரவணன், தரணிதரன், கிருஷ்ணகுமார் ஆகியோர் அச்சமங்கலம் கிராமத்தில் தொல்லியல் மேற்பரப்பு கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஆசாரிவட்டம் பகுதியில் சின்னச்சாமி என்பவருக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் 3000 ஆண்டுகளுக்கு முந்தைய புதிய கற்காலக் கருவிகள் இருப்பதைக் கண்டு பிடித்தனர்.

இதுகுறித்து பேராசிரியர் ஆ.பிரபு கூறியதாவது:-

திருப்பத்தூர் மாவட்டத்தைச் சுற்றிலும் பல்வேறு வரலாற்றுத் தடயங்கள் எங்களின் கள ஆய்வின் வாயிலாகக் கண்டறியப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, திருப்பத்தூரில் இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அச்சமங்கலம் கிராமத்தில் கள ஆய்வு மேற்கொண்டபோது, அங்குள்ள ஆசாரிவட்டம் கிராமத்தில் சின்னச்சாமி என்பவருக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் சிதைந்த நிலையில் கல்வட்டங்கள் இருப்பதை கண்டறிந்தோம். நில உரிமையாளரிடம் அனுமதி பெற்று, அங்கு ஆய்வு மேற்கொண்டோம்.

அங்கு, ஒரு கல்வட்டம் இருந்த இடம் விவசாயப் பணிகளை மேற்கொண்டபோது சிதைக்கப்பட்டு இருந்தது. அந்த இடத்தில் பெண் தெய்வம் இருப்பதாகக் கூறி வழிபட்டு வருகின்றனர். தற்சமயம் புதர் மண்டிக்கிடக்கும் அவ்விடத்தில் ஆய்வு செய்தபோது, புதிய கற்கால மக்கள் பயன்படுத்திய கூர்மையான வேட்டைக்கருவி ஒன்று கண்டறியப்பட்டது.

அக்கருவி 11 செ.மீ நீளமும், 2 செ.மீ அகலமும் கொண்டதாக உள்ளது. முனையில் கூர்மையாகச் செதுக்கப்பட்டு, அதன் அடிபாகம் கைப்பிடிக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது. இதை, புதிய கற்கால மக்கள் விலங்குகளை வேட்டையாட பயன்படுத்தி இருக்கக்கூடும். கையில் வைத்துப் பயன்படுத்தும் விதத்திலும், கைத்தடியில் வைத்துக் கட்டி, ஈட்டியை போல் பயன்படுத்தும் விதத்திலும் இக்கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் கருவி கிடைத்த இடத்தில் இருந்து 50 மீட்டர் தொலைவில் சிறு சிறு கற்களை குவித்து வைத்துள்ளனர். அங்கு மேற்கொண்ட ஆய்வில் அரவைக்கல் ஒன்று கண்டறியப்பட்டது. அந்த அரவைக் கல் 16 செ.மீ நீளமும் 12 செ.மீ அகலமும் கொண்ட கோள வடிவத்தில் உள்ளது. அதன் மேற்புறமும், அடிபுறமும் பள்ளமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கல்லை தேய்த்து மெருகூட்டி அழகாக வடிவமைத்துள்ளனர். இதை, மூலிகை அரைக்கவோ அல்லது சந்தனம் மற்றும் சுகந்த திரவியம் அரைக்கவோ பயன்படுத்தி இருக்கக்கூடும்.

மேலும் இவ்விடத்தைச் சுற்றிலும் பல கல்வட்டங்கள் இருந்ததற்கான அடையாளங்கள் காணப்படுகின்றன. அவற்றை விவசாயப் பணிகளுக்காக அப்புறப்படுத்தி உள்ளது, அங்குள்ள மக்களிடம் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வருகிறது. திருப்பத்தூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கிடைத்து வரும் வரலாற்றுச் சான்றுகள் இம்மாவட்டத்தின் வரலாற்றை எடுத்துக்காட்டுவதாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்