ஊட்டியில் விலை வீழ்ச்சியால் விரக்தி: கொய்மலர் சாகுபடியை கைவிட்ட விவசாயிகள்

ஊட்டியில் விலை வீழ்ச்சியால் விரக்தி அடைந்த விவசாயிகள், கொய்மலர் சாகுபடியை கைவிட்டனர்.

Update: 2020-10-04 02:17 GMT
ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு பச்சை தேயிலைக்கு கடுமையாக விலை வீழ்ச்சி ஏற்பட்டது. இதனால் சிறு, குறு விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதை கருத்தில் கொண்டு தமிழக அரசு தேயிலைக்கு மாற்று பயிராக கொய்மலர் சாகுபடியில் ஈடுபட விவசாயிகளுக்கு மானியம் வழங்கியது. அதனடிப்படையில் ஊட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தேயிலை விவசாயத்தை மேற்கொண்டு வந்த விவசாயிகள் கொய்மலர் சாகுபடிக்கு மாறினர். கார்னேசன், லில்லியம், அஸ்டனேரியா உள்ளிட்ட ரகங்களை சேர்ந்த கொய்மலர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் கொய்மலர்களை விரும்பி வாங்கி செல்வது வழக்கம்.

ஆனால் தற்போது ஊரடங்கு உத்தரவால் தற்போது பூங்காக்கள் மட்டும் திறக்கப்பட்டு உள்ளன. பெரும்பாலும் சுற்றுலா பயணிகள் ஒரே நாளில் வந்துவிட்டு திரும்புவதால் அவர்கள் கொய்மலர்களை வாங்க ஆர்வம் காட்டவில்லை. மேலும் திருமண வரவேற்பு நிகழ்ச்சிகளில் கார்னேசன் உள்ளிட்ட கொய்மலர்கள் அலங்காரம் முக்கியமாக இடம்பெறும். தற்போது அரசின் விதிமுறைகளை பின்பற்ற வேண்டி உள்ளதால் ஆடம்பரமாக திருமணங்கள் நடைபெறுவது இல்லை. இதனால் கொய்மலர்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை. விலை வீழ்ச்சி ஏற்பட்டதால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். மலர்கள் பூத்து குலுங்கியும், அதனை பறிக்காமல் அப்படியே விட்டுவிடும் நிலை காணப்படுகிறது. மொத்த வியாபாரிகள் கொள்முதல் செய்ய வராததால் கொய்மலர்கள் வீணாகி வந்தன.

இதன் காரணமாக நஷ்டம் அடைந்ததால் ஊட்டி அருகே கொதுமுடி, இடுஹட்டி உள்ளிட்ட கிராமங்களில் விவசாயிகள் விரக்தி அடைந்து கொய்மலர் சாகுபடியை கைவிட்டு வருகின்றனர். அவர்கள் தங்களது நிலத்தில் அமைத்த பசுமை குடிலில் மேற்கூரையை அகற்றிவிட்டு, நிலத்தில் கேரட், பீட்ரூட் போன்ற காய்கறிகளை சாகுபடி செய்து வருகின்றனர். ஆனால் பசுமை குடில்களுக்காக அமைக்கப்பட்ட கம்பிகள் அகற்றப்படாமல் உள்ளது.

இது குறித்து விவசாயிகள் கூறும்போது, பச்சை தேயிலை விலை வீழ்ச்சியால் கொய்மலர் சாகுபடிக்கு மாறினோம். தற்போது கொய்மலர் சாகுபடி போதிய அளவுக்கு ஏற்றுமதி இல்லாததாலும், உரிய விலை கிடைக்காததாலும் நஷ்டம் அடைந்து உள்ளோம். ஏற்கனவே கொய்மலர் விதைகள் தரமில்லாமல் வழங்கப்பட்டதால் அவை முளைக்காமல் போனது. தனியார் நிறுவனங்கள் முளைப்பு திறனை பரிசோதனை செய்யாமல் வினியோகித்ததால் இந்த நிலை ஏற்பட்டது. மேலும் கொய்மலர்களை சந்தைப்படுத்துவதில் சிக்கல் நீடித்தது. தற்போது ஊரடங்கு உத்தரவால் கொய்மலர்களை பராமரிக்க முடியவில்லை. உரிய விலை கிடைக்காமல் நஷ்டம் அடைந்த நாங்கள் காய்கறிகள் சாகுபடி செய்ய களம் இறங்கி உள்ளோம் என்றனர்.

மேலும் செய்திகள்