பாலியல் வன்கொடுமையில் இளம்பெண் பலி: ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
உத்தரபிரதேச மாநிலத்தில் பாலியல் வன்கொடுமையில் இளம்பெண் பலியான சம்பவத்தை கண்டித்து நாகர்கோவிலில் ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகர்கோவில்,
உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் 19 வயது இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், இதற்கு காரணமானவர்கள் மீது காலம் தாழ்த்தாமல் கொலை வழக்கு மற்றும் வன்கொடுமை உள்பட தகுந்த சட்டப்பிரிவுகளில் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரபிரதேச மாநில பா.ஜனதா அரசை வலியுறுத்தியும், அந்த பெண்ணின் உடலை குடும்பத்தாருக்கு தெரிவிக்காமல் எரித்த மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் ஆகியவற்றின் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் ரெகுபதி தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் உஷாபாசி, மாநிலக்குழு உறுப்பினர் லீமாரோஸ், மாவட்ட துணைச்செயலாளர் டெல்பின், இந்திய மாணவர் சங்க மாவட்ட தலைவர் பதில்சிங், ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் எட்வின் பிரைட், பொருளாளர் ரதீஷ்குமார் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.
இதில் அவரவர் சங்கக் கொடிகளுடன் ஆண்களும், பெண்களுமாக ஏராளமானோர் கலந்து கொண்டனர். கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இதேகோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் நாகர்கோவில் வேப்பமூடு மாநகராட்சி பூங்கா முன் நேற்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு மாநகர செயலாளர் மோகன் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் அகமது உசேன் போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். மாவட்டக்குழு உறுப்பினர் அந்தோணி, பேராசிரியர் மனோகர் ஜஸ்டஸ், பரமசிவம், அசிஸ் உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். மாவட்ட செயற்குழு உறுப்பினர் தங்கமோகன் நிறைவுரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் ஆண்கள், பெண்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். கட்சிக்கொடிகளுடன் போராட்டத்தில் கலந்து கொண்ட அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றவர்கள் அனைவரும் முகக்கவசங்கள் அணிந்து கலந்து கொண்டனர்.