முருகம்பாளையத்தில் புதிய டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு; பொதுமக்கள் சாலைமறியல் - 2 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு

திருப்பூர் முருகம்பாளையத்தில் புதிதாக திறக்கப்படவுள்ள டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2020-10-04 00:12 GMT
வீரபாண்டி,

திருப்பூர் முருகம்பாளையம் பகுதி அதிக அளவில் பனியன் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் பள்ளிகள் என எப்போதும் பரபரப்பாக காணப்படும். இதில் பாரக்காடு மெயின் சாலையில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்க தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது.

இதற்கு அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் அனைத்து கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் நேற்று அனைத்து கட்சி மற்றும் ஊர் பொதுமக்கள் ஒன்று சேர்ந்து முருகம்பாளையம் மெயின் ரோட்டில் டாஸ்மாக் கடையை திறக்கக்கூடாது என்று கூறி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத்தொடர்ந்து காலை 10 மணி அளவில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வீரபாண்டி போலீசார் மற்றும் தெற்கு தாசில்தார் சுந்தரம் ஆகியோர் சாலைமறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் சமாதானம் அடையாத ஊர் பொதுமக்கள் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த இந்து முன்னணியின் மாநிலத்தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு ஆதரவு தெரிவித்தார்.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:-

முருகம்பாளையம் பகுதியில் தனியார் பள்ளி மற்றும் அரசு பள்ளி மற்றும் சிறு, குறு தொழில் சார்ந்த அமைப்புகள் அதிக அளவில் செயல்பட்டு வருகிறது. மேலும் தற்போது திறக்கப்பட உள்ள டாஸ்மாக் கடையை சுற்றிலும் 2 கோவில்கள் இருக்கின்றன.

அந்த பகுதியில் திடீரென்று டாஸ்மாக் கடை உருவாக்கப்படுவதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது. எனவே டாஸ்மாக் கடையை உடனடியாக வேறு இடத்துக்கு மாற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உரிய முறையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். அதன் காரணமாக பொதுமக்கள் மற்றும் அனைத்து கட்சியினர் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்