தனியார் நிறுவனத்தில் ரூ.1¾ லட்சம் மின்சாதன பொருட்கள் திருட்டு - ஊழியர்கள் 2 பேர் கைது

தனியார் நிறுவனத்தில் ரூ.1¾ லட்சம் மின்சாதன பொருட்கள் திருடப்பட்டது தொடர்பாக அங்கு பணியாற்றிய 2 ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.

Update: 2020-10-03 23:22 GMT
பூந்தமல்லி,

காஞ்சீபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் தாலுகா, பட்டுநூல்சத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் கோகுல்நாத் (வயது 31).இவர் திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் தொடுகாடு ஓம் நகரில் சொந்தமாக நிறுவனம் நடத்தி வருகிறார். அந்த நிறுவனத்தில் மின்சாதன பொருட்களை இருப்பு வைத்து அதனை வேறு தொழிற்சாலைகளுக்கு அனுப்பி வந்தார். அவரது நிறுவனத்தில் திருவள்ளூரை அடுத்த திருப்பந்தியூரை சேர்ந்த கவுரிசங்கர் (42), செல்வம் (44) ஆகியோர் பணிபுரிந்து வந்தனர். அவர்கள் இருவரும் அந்த நிறுவனத்தில் உள்ள பொருட்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் இருந்து அந்த தனியார் நிறுவனம் மூடப்பட்டு இருந்தது. அதில் இருந்த பொருட்கள் ஊழியர்களான கவுரிசங்கர், செல்வம் ஆகியோர் பொறுப்பில் இருந்தது. இந்த நிலையில் கடந்த மாதம் சம்பவ இடத்திற்கு வந்த கோபிநாத் அலுவலகத்தின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு இருந்த தெரு விளக்குகள் மற்றும் மின்சாதன பொருட்கள் என ரூ. 1 லட்சத்து 81 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் திருட்டு போனது தெரியவந்தது.

இது குறித்து கோகுல்நாத் மப்பேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர். போலீஸ் விசாரணையில் அந்த தனியார் நிறுவனத்தில் காணாமல் போன பொருட்களை திருடியது அங்கு பணிபுரிந்த ஊழியர்களான கவுரிசங்கர், செல்வம் என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த மின்சாதன பொருட்களை கைப்பற்றினர்.

மேலும் செய்திகள்