மராட்டியத்தில் புதிதாக 190 போலீசாருக்கு கொரோனா பாதிப்பு

மராட்டியத்தில் புதிதாக 190 போலீசார் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Update: 2020-10-03 22:30 GMT
மும்பை, 

நாட்டிலேயே மராட்டியத்தில் தான் கொரோனா பாதிப்பு அதிகளவில் உள்ளது. இதில் மாநிலத்தில் போலீசாரும் அதிகளவில் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்தநிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மாநிலம் முழுவதும் 190 போலீசார் வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் இதுவரை மாநிலத்தில் பாதிக்கப்பட்ட போலீசாரின் எண்ணிக்கை 23 ஆயிரத்து 879 ஆக உயர்ந்து உள்ளது. இதில் 20 ஆயிரத்து 871 பேர் குணமடைந்துவிட்டனர். தற்போது 2 ஆயிரத்து 758 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேபோல புதிதாக 2 போலீசார் ஆட்கொல்லி நோய்க்கு பலியானதால் இதுவரை தொற்றுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 250 ஆக உயர்ந்து உள்ளது. இதில் சுமார் 25 பேர் அதிகாரிகள் ஆவர்.

இதேபோல இதுவரை ஊரடங்கை மீறியது தொடா்பாக 2 லட்சத்து 74 ஆயிரத்து 604 வழக்குகளை போலீசார் பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக 39 ஆயிரத்து 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஊரடங்கை மீறியவர்களிடம் இருந்து ரூ.29 கோடியே 37 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்