பெங்களூருவில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட தொழில் அதிபர் கைது
பெங்களூருவில், போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக தொழில் அதிபரை போலீசார் கைது செய்தனர்.
பெங்களூரு,
கன்னட திரையுலகினர் போதைப்பொருள் பயன்படுத்தியது குறித்து மத்திய குற்றப்பிரிவு இணை போலீஸ் கமிஷனர் சந்தீப் பட்டீல் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக கன்னட நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி, அவர்களது நண்பர்கள் ரவிசங்கர், ராகுல், போதைப்பொருள் விற்பனையாளர்களான வீரேன் கண்ணா, வைபவ் ஷெட்டி, லோயம் பெப்பர் சம்பா, பிரதிக் ஷெட்டி, சீனிவாஸ் சுப்பிரமணியன் உள்பட 15 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பெங்களூரு சஞ்சய்நகர் போலீசாருக்கு தங்களது எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீட்டில் வைத்து போதைப்பொருள் விற்பனை நடப்பதாக தகவல் கிடைத்தது. அந்த தகவலின்பேரின் ஜே.சி.நகர் உதவி போலீஸ் கமிஷனர் ரீமா, இன்ஸ்பெக்டர் பாலாஜி தலைமையிலான போலீசார் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீட்டில் சோதனை நடத்தி கொண்டு இருந்தனர்.
இந்த சந்தர்ப்பத்தில் அந்த வீட்டிற்கு ஒருவர் வந்தார். அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் அதே அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வருவதாக தெரிவித்தார். இதனால் அவர் வசித்து வரும் வீட்டிற்கு சென்று போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது அவரது வீட்டில் இருந்து போதைப்பொருள், கஞ்சா சிக்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதையடுத்து அந்த நபரை கைது செய்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அவர் பெயர் அருண் என்கிற வருண் என்பதும், அவர் தொழில் அதிபர் என்பதும் தெரிந்தது. மேலும் அருண் தனது வீட்டில் வைத்து போதைப்பொருள் விற்பனை செய்ததாகவும், தனது வீட்டிலேயே விருந்து நிகழ்ச்சிகளை நடத்தியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் இந்த விருந்து நிகழ்ச்சிகளில் சில நடிகர், நடிகைகளும் கலந்து கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. கைதான அருண் மீது சஞ்சய்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவருக்கு போதைப்பொருள் விற்பனை செய்யும் கும்பலுடன் தொடர்பு உள்ளதா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.