மக்கள் நீதிமன்றத்தில் ஒரே நாளில் 29 வழக்குகளுக்கு தீர்வு
தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் ஒரே நாளில் 29 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.;
தூத்துக்குடி,
மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று சிறிய அளவிலான மக்கள் நீதிமன்றம் நடந்தது. மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவர் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி டாக்டர்.வினித் கோத்தாரி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, கோவில்பட்டி, திருச்செந்தூர் ஆகிய மூன்று இடங்களில் மக்கள் நீதிமன்றம் நடந்தது. தூத்துக்குடி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் இயங்கி வரும் சமரச தீர்வு மைய கட்டிடத்தில் வைத்து முதன்மை மாவட்ட நீதிபதி என்.லோகேசுவரன் தலைமையில் நடைபெற்றது. அதில் 2-வது கூடுதல் மாவட்ட நீதிபதி பிலிப் நிக்கோலஸ் அலெக்ஸ், சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் சார்பு நீதிபதி ஆர்.சாமுவேல் பெஞ்சமின், 3-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு சக்திவேல், தூத்துக்குடி வக்கீல் சங்கம் திலக், காப்பீடு நிறுவன மேலாளர்கள், வக்கீல்கள், வழக்குதாரர்கள், கோர்ட்டு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
இதில் மொத்தம் 131 வழக்குகள் சமரசம் பேசி தீர்வு காண எடுக்கப்பட்டது. 29 வழக்குகளுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டு தீர்ப்பு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. மேற்படி 29 வழக்குகளில் தீர்வு தொகை ரூ.88 லட்சத்து 17 ஆயிரத்து 631 ஆகும்.
இந்த மக்கள் நீதிமன்றம் அரசின் கொரோனா வைரஸ் வழிகாட்டுதல் அடிப்படையிலும், சமூக இடைவெளியுடனும், அனைவரும் முககவசம் அணிந்தும் உரிய விதிமுறைகளை பின்பற்றி நடந்தது.