காய்கறிக்கு இடையே பதுக்கி வைத்து லாரியில் ரேஷன் அரிசி கடத்திய தென்காசியை சேர்ந்த 2 பேர் கைது - கத்தை, கத்தையாக பணமும் சிக்கியதால் பரபரப்பு
காய்கறிக்கு இடையே பதுக்கி வைத்து லாரியில் கடத்திய 5½ டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக தென்காசியை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடம் இருந்து கத்தை, கத்தையாக பணமும் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
களியக்காவிளை,
குமரி வழியாக கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக வருவாய்துறை சார்பில் தனிப்படையும், போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் சோதனைச்சாவடிகள் மூலமும் தீவிர கண்காணிப்பு பணி நடந்து வருகிறது.
இந்தநிலையில் குமரி-கேரள எல்லை பகுதியான பளுகல் பகுதியில் நேற்று காலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். அந்த லாரியில் காய்கறிகள் இருந்தது. அதனை அப்புறப்படுத்தி விட்டு சோதனை செய்தனர். லாரியில் காய்கறிக்கு அடியில் சாக்கு மூடைகளில் 5½ டன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் லாரியில் ரூ.4 லட்சத்து 18 ஆயிரத்து 610 பணமும் இருந்தது. கத்தை, கத்தையாக பணமும் கைப்பற்றப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து ரேஷன் அரிசி, பணம் மற்றும் லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அதை தொடர்ந்து லாரியில் இருந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் தென்காசியை சேர்ந்த ராசு (வயது 41), பாஸ்கர் (19) என்பதும், அவர்கள் தென்காசியில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசியை கடத்தி செல்வதும் தெரியவந்தது.
இதையடுத்து பறிமுதல் செய்த அரிசியை காப்புக்காடு அரசு குடோனிலும், லாரியை விளவங்கோடு தாலுகா அலுவலகத்திலும் போலீசார் ஒப்படைத்தனர். மேலும் இதுதொடர்பாக 2 பேரையும் கைது செய்தனர்.
மேலும், ரூ.4 லட்சம் பற்றி போலீசார் கேட்ட போது, அவர்கள் முறையான பதில் சொல்லவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அந்த பணத்தை கோர்ட்டில் ஒப்படைத்தனர். அதே சமயத்தில், ரேஷன் அரிசி கடத்தலில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா? என்றும் விசாரணை நடத்தப்படுகிறது.