காந்தி ஜெயந்தியையொட்டி மரக்கன்று நடும்விழா கலெக்டர் ஜெயகாந்தன் தொடங்கி வைத்தார்

காந்தி ஜெயந்தி விழாவையொட்டி சிவகங்கை அருகே 5ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் தொடங்கி வைத்தார்.;

Update: 2020-10-03 05:17 GMT
காளையார்கோவில்,

காந்தி ஜெயந்தி விழாவையொட்டி சிவகங்கையை அடுத்த நாட்டரசன்கோட்டையில் காவிரி கூக்குரல் இயக்கம் சார்பில் 5 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. விழாவிற்கு சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் தலைமை தாங்கி மரக்கன்றை நட்டு வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:- அண்ணல் மகாத்மா காந்தியடிகள் இந்திய நாட்டின் தலைமகனாக திகழ்ந்தவர். மேலும் அவர் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு கிராமமும் சுய சார்பு கிராமமாக மாற்றப்பட்டு பொருளாதார மேம்பாடு அடைய வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டிருந்தார்.

அதன் அடிப்படையில் கிராம மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் விதமாக மரம் சார்ந்த விவசாயத்தை விவசாயிகளிடம் கொண்டு சேர்க்கும் பணியை காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் 1 லட்சத்து 16 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணியை தொடங்க திட்ட மிட்டு தற்போது அதற்கான பணிகள் மேற்கொண்டு வரும் நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் 5 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் வகையில் இந்த பணி தொடங்கப்பட்டுள்ளது. மரம் வளர்ப்பது என்பது ஒவ்வொருவரும் தன்னுடைய கடமையாக எடுத்து செயல்பட்டால் வரும் காலத்தில் பசுமைப் புரட்சி உருவாக்கலாம். இன்றைய காலக்கட்டத்தில் ஒவ்வொரு மனிதனுக்கும் சுகாதாரம் என்பது மிகவும் இன்றியமையாத ஒன்றாகும். அதில் பெரும் பங்கு வகிப்பது தூய்மையான காற்று.

அந்த காற்றை பெறுவது மரங்களால் மட்டும் தான் முடியும். அந்த மரங்களை உருவாக்குவது என்பது கிராமத்தில் இருந்து தொடங்கி நகர் புறங்கள் வரை முடிந்தளவு வீடுகளிலும் நட்டு பராமரிக்க வேண்டும். பொதுவாக விளைநிலத்தில் 30 சதவீத மரங்கள் வளர்ப்பது என்பது அரசின் நோக்கமாகும். அதை நிறைவேற்றும் வண்ணம் சிறிய விவசாயிகள் முதல் பெரிய விவசாயிகள் வரை தங்களது நிலப்பகுதியில் முடிந்தளவு மரங்களை வளர்த்து தூய்மையான காற்றை பெறுவது மட்டுமல்லாமல் எந்தளவிற்கு மரங்கள் உள்ளதோ அந்தளவிற்கு நல்ல மழையும் பொழியும்.

இது தவிர அந்த இடங்களில் நல்ல வாழ்வாதாரமும் பெருகும் என்ற உன்னத நிலையை நிலை நிறுத்தும் வகையில் எல்லோரும் மரம் வளர்த்து அண்ணல் காந்தியடிகளின் கனவை நினைவாக்கும் வகையில் செயலாற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் இயற்கை வேளாண்மை சர்வதேச ஆலோசகர் முனைவர் முருகேசன், காவேரி கூக்குரல் இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் தமிழ்மாறன், மாயன், அலெக்சாண்டர், காளையார்கோவில் தாசில்தார் ஜெயநிர்மலா, வேளாண்மை பொறியியல் துறை உதவி பொறியாளர் வனராஜன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்