திருப்பத்தூரில் ஆசிரியர் வீட்டில் திருடிய கர்நாடக கொள்ளையன் கைது 12 மணி நேரத்தில் போலீசார் நடவடிக்கை

திருப்பத்தூரில் ஆசிரியர் வீட்டில் நடந்த திருட்டு வழக்கில் கர்நாடகத்தை சேர்ந்த கொள்ளையன் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து ரூ.9 லட்சம் மதிப்புள்ள நகை, பணம் மீட்கப்பட்டது.

Update: 2020-10-03 04:59 GMT
திருப்பத்தூர்,

திருப்பத்தூர் அவுசிங் போர்டு பகுதியில் வசிப்பவர் விநாயகம் (வயது 36) ஆசிரியர். இவரது மனைவி ஜீவா (34). இவர்கள் இருவரும் வீட்டைப் பூட்டிவிட்டு ஜீவாவின் பெற்றோரை பார்க்க வாணியம்பாடி அருகே உள்ள வள்ளிபட்டு கிராமத்திற்கு சென்றனர். இந்த நேரத்தில் வீட்டின் பூட்டை உடைத்த மர்மநபர்கள் பீரோவில் இருந்த 43 பவுன் நகை மற்றும் ரூ.85 ஆயிரம் திருட்டு போனதாக திருப்பத்தூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் விநாயகம் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தங்கவேல், ஜெகநாதன் (பயிற்சி) ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. மேலும் அந்தப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான தோற்றத்தை வைத்து, கிருஷ்ணகிரி, பெங்களூரு, தர்மபுரி பகுதிகளில் விசாரணை நடத்தியதில், விநாயகம் வீட்டில் திருடியது கிருஷ்ணகிரி பகுதிகளில் தொடர் திருட்டு வழக்கில் கைதான கர்நாடகா மாநிலம், முடிகரே தாலுகா, பஸ்கல் கிராமத்தை சேர்ந்த ரமேஷ் (67) என்பது தெரிய வந்தது. திருப்பத்தூர் பகுதியில் உள்ள லாட்ஜில் அறை எடுத்து தங்கி பல்வேறு பகுதிகளை நோட்டமிட்டு திருடி வந்த ரமேசை போலீசார் கைது செய்தனர்.

அவரிடமிருந்து ரூ.9 லட்சம் மதிப்புள்ள 20 பவுன் நகைகள் மற்றும் ரூ.22 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுபற்றி தகவலறிந்ததும் போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தாலுகா போலீஸ் நிலையத்துக்கு சென்று பறிமுதல் செய்யப்பட்ட நகைகள், மற்றும் பணத்தை பார்வையிட்டு, 12 மணி நேரத்தில் குற்றவாளியை கைது செய்த போலீசாருக்கு வெகுமதி வழங்கி பாராட்டினார்.

மேலும் செய்திகள்