திருக்கோவிலூரில் பரபரப்பு: அரசு ஆஸ்பத்திரி பிணவறையில் உடலை கடித்து குதறிய எலிகள் - போலீசாருடன் உறவினர்கள் வாக்குவாதம்

திருக்கோவிலூர் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள பிணவறையில் இருந்த உடலை எலிகள் கடித்து குதறின. இது குறித்து போலீசாரிடம் உறவினர்கள் தட்டிக்கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2020-10-03 04:17 GMT
திருக்கோவிலூர்,

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரை அடுத்துள்ள ஆவியூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம்(வயது 40), கொத்தனார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் திருக்கோவிலூர் கிழக்கு வீதியில் உள்ள ஒரு கட்டிடத்தின் மாடியில் அமைக்கப்பட்டிருந்த சாரத்தை சக ஊழியர்களுடன் பிரித்துக்கொண்டிருந்தார். அப்போது முருகன் என்பவர் சாரத்தில் இருந்த கம்பு ஒன்றை பிரித்து எடுத்த போது அது அந்த வழியாக சென்ற மின்கம்பியில் பட்டதால் மின்சாரம் தாக்கி முருகன், ஆறுமுகம் இருவரும் மாடியில் இருந்து கீழே விழுந்தனர்.

இதில் ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயம் அடைந்த முருகன் திருக்கோவிலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் பலியான ஆறுமுகத்தின் உடலை திருக்கோவிலூர் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருக்கோவிலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரது உடல் பிணவறையில் வைக்கப்பட்டது.

பின்னர், டாக்டர்கள் பிரேத பரிசோதனை செய்து அவரது உடலை போலீசாரிடம் ஒப்படைத்தனர். அதன்பிறகு ஆறுமுகத்தின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

அப்போது ஆறுமுகத்தின் மூக்கு மற்றும் கால் பகுதி எலிகள் கடித்து குதறி இருப்பதை அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் இதுபற்றி போலீசாரிடம் கேட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது இறந்தவர்களின் உடலை பாதுகாக்க வேண்டியது ஆஸ்பத்திரி நிர்வாகத்தின் பொறுப்பு. எனவே இது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று கூறி அவர்களை போலீசார் சமாதானம் செய்தனர். இதை ஏற்று ஆறுமுகத்தின் உடலை அவரது குடும்பத்தினர் ஆஸ்பத்திரியில் இருந்து எடுத்துச்சென்று அடக்கம் செய்தனர்.

அரசு ஆஸ்பத்திரி பிணவறையில் இறந்தவரின் உடலை எலிகள் கடித்து குதறிய சம்பவம் தொடர்பாக திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜி, இன்ஸ்பெக்டர் செல்வம், சப்-இன்ஸ்பெக்டர்கள் சிவசந்திரன், உலகநாதன், சுந்தர்ராஜன் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்