கம்பம், பெரியகுளம் ஒன்றிய ஊராட்சிகளில் தடையை மீறி தி.மு.க.வினர் நடத்திய கிராமசபை கூட்டம்

கம்பம், பெரியகுளம் ஒன்றிய ஊராட்சிகளில் தி.மு.க.வினர் தடையை மீறி கிராமசபை கூட்டங்களை நடத்தினர்.

Update: 2020-10-03 03:47 GMT
கம்பம்,

அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டங்கள் நடைபெறுவதாக தமிழக அரசு அறிவித்து, பின்னர் கொரோனா தொற்றின் காரணமாக கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இந்தநிலையில் அனைத்து ஊராட்சிகளில் உள்ள மக்களை சந்தித்து வேளாண் சட்டத்தின் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் தி.மு.க சார்பில் கிராமசபை கூட்டம் நடத்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சியினருக்கு உத்தரவிட்டிருந்தார்.

தேனி மாவட்டம் கம்பம் ஒன்றியத்தில் 5 ஊராட்சிகள் உள்ளன. இந்தநிலையில் நேற்று கம்பம் ஒன்றிய செயலாளர் சூர்யா தங்கராஜா தலைமையில் தி.மு.க.வினர் நாராயணத்தேவன்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு கிராமசபை கூட்டம் நடத்தினர். அதில் வேளாண் சட்டங்களை திரும்ப பெறவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி பொதுமக்களிடம் கையெழுத்து பெற்றனர். இதில் தொ.மு.ச மாவட்ட தலைவர் செல்லப்பா, பொறுப்புக்குழு உறுப்பினர் கள் சிவசாமி, செல்வகுமார், விவசாய அணி அமைப்பாளர் ராஜாங்கம், மாவட்ட பிரதிநிதி முத்துவீரப்பன் உள்ளிட்ட தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

கருநாக்கமுத்தன்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தலைவர் மொக்கப்பன் மாவட்ட ஊராட்சிக்குழு கவுன்சிலர் தமயந்தி உள்ளிட்ட உறுப்பினர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு கூடலூர் இன்ஸ்பெக்டர் முத்துமணி அலுவலகத்திற்குள் வந்து, கூட்டம் கூட்டக்கூடாது, கலைந்து செல்லுங்கள் என்றார். அதற்கு தலைவர் மொக்கப்பன் மற்றும் உறுப்பினர்கள் அரசு உத்தரவின் பேரில் நாங்கள் கிராமசபை கூட்டத்தை ரத்து செய்து விட்டோம். ஊராட்சி சம்பந்தமான குறைகளை பேசிக்கொண்டிருக்கிறோம் என கூறி இன்ஸ்பெக்டருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர்.

இதேபோல் சுருளிப்பட்டி குள்ளப்பகவுண்டன்பட்டி, ஆங்கூர்பாளையம் ஆகிய ஊராட்சி அலுவலகம் அருகே தடையை மீறி தி.மு.க.வினர் கிராமசபை கூட்டம் நடத்தினர். இதில் அவர்கள் வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி தீர்மானம் நிறைவேற்றி பொதுமக்களிடம் கையெழுத்து பெற்றனர். இந்தநிலையில் தடையை மீறி கிராமசபை கூட்டம் நடத்தியதாக 30 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

பெரியகுளம் ஒன்றியம், வடபுதுப்பட்டி ஊராட்சியில் தடையை மீறி தி.மு.க. சார்பில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் ரேணுப்பிரியா பாலமுருகன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் தேனி நகர தி.மு.க பொறுப்பாளர் பாலமுருகன், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் சரவணன், ஊராட்சி துணைத்தலைவர் பிரியா மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதுபோல எண்டப்புளி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் சின்னப்பாண்டியன் தலைமையில் கிராமசபை கூட்டம் நடந்தது. முன்னதாக காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஊராட்சி மன்ற அலுவலகத்தில் காந்தி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

மேலும் செய்திகள்