தூய்மை இந்தியா திட்டத்தில் முதலிடம்: நெல்லை மாவட்ட கலெக்டருக்கு சிறப்பு விருது

தூய்மை இந்தியா திட்டத்தில் நெல்லை மாவட்டம் முதலிடம் பிடித்தது. இதையொட்டி நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பாவுக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது.

Update: 2020-10-03 02:36 GMT
நெல்லை,

நெல்லை மாவட்டத்தில் தற்போது முனைப்புடன் செயல்பட்டு வரும் தூய்மை இந்தியா இயக்க திட்டத்தின் கீழ் ஊரகப் பகுதிகளில் அனைத்து வீடுகளிலும் கழிப்பறை அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.

கழிவறை கட்ட வசதி இல்லாத குடும்பங்கள் மற்றும் வாடகை வீடுகளில் குடியிருக்கும் குடும்பங்களில் உள்ள மக்கள் பயன்படுத்துவதற்காக, மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான ஒருங்கிணைந்த சுகாதார வளாகம் மற்றும் சமுதாய பொது கழிவறைகள் பல்வேறு திட்டங்களில் அமைக்கப்பட்டு உள்ளது.

இந்தத் திட்டத்தின்கீழ் செயல்படும் பணிகளில் ஒன்றான சுகாதார வளாகம் மற்றும் சமுதாய பொதுக்கழிவறை பயன்பாடு மற்றும் பராமரிப்பு தொடர்பான தேசிய அளவில் சிறந்த மாவட்டங்களுக்கு விருது வழங்கும் போட்டியில், இந்திய அளவில் முதல் மாவட்டமாக நெல்லை மாவட்டம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

இதற்கான விருது வழங்கும் விழா நேற்று காணொலிகாட்சி மூலம் நடந்தது. தூய்மை இந்தியா திட்டத்தில் முதலிடம் பெற்றதற்கான சிறப்பு விருதினை மத்திய ஊரக வளர்ச்சித்துறை மந்திரி கஜேந்திர சிங் செகாவத் காணொலிகாட்சி மூலம் நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பாவிடம் வழங்கினார். பின்னர் அவர், கலெக்டரை பாராட்டி, வாழ்த்து தெரிவித்தார்.

மேலும் செய்திகள்