தானேயில் வணிக வளாகத்தில் பயங்கர தீ; 6 கடைகள் எரிந்து நாசம்
தானேயில் வணிக வளாகத்தில் பயங்கர தீ ஏற்பட்டு 6 கடைகள் எரிந்து நாசமடைந்தன.
தானே,
தானே ஜி.பி ரோடு பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் மருந்துக்கடை, இனிப்பு கடை மற்றும் மதுபானம், எலக்ட்ரானிக் கடைகள் உள்ளது. நேற்று காலை 6 மணி அளவில் அங்குள்ள ஒரு கடையில் தீ விபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்தில் தீ மள மளவென பரவி அங்கிருந்த கடைகள் அனைத்தும் கொழுந்துவிட்டு எரிந்தன.
இது பற்றி தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் 12 வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அங்கு பற்றிய தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரம் போராடி அங்கு பற்றிய தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் வணிக வளாகத்தில் இருந்த 6 கடைகள் முற்றிலும் எரிந்து நாசமானது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தீ விபத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என போலீசார் தெரிவித்தனர்.