ஊரடங்கு தளர்வை தொடர்ந்து 27 வாரங்களுக்கு பிறகு கூடிய பாப்பாரப்பட்டி ஆட்டுச்சந்தை முறையான அறிவிப்பு இல்லாததால் வியாபாரம் மந்தம்

ஊரடங்கு தளர்வை தொடர்ந்து 27 வாரங்களுக்கு பிறகு பாப்பாரப்பட்டி ஆட்டுச்சந்தை கூடியது. ஆனால் இது குறித்து முறையான அறிவிப்பு இல்லாததால் வியாபாரம் மந்தமாக நடைபெற்றது.;

Update: 2020-10-02 05:20 GMT
பாப்பாரப்பட்டி,

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் வாரந்தோறும் வியாழக்கிழமை அன்று நடைபெறும் வாரச்சந்தை மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு காய்கறி, பழங்கள், துணிமணிகள், தானியங்கள், கருவாடு, சட்டி- பானைகள், மூங்கில், ஏணி, கலப்பை உள்ளிட்ட மரச்சாமான்கள், அரிவாள், கோடாரி உள்ளிட்ட உழவுக்கருவிகள் விற்பனை செய்யும் சுமார் ஆயிரம் கடைகளுக்கு மேல் உள்ளன.

மலை மற்றும் காடுகள் சூழ்ந்த பகுதியின் மையமாக அமைந்திருப்பதால் ஆடு, மாடு மற்றும் நாட்டுக்கோழி ஆகிய கால்நடைகளும் இந்த சந்தையில் அதிக அளவில் வியாபாரம் நடைபெறும். இதன் காரணமாக இந்த சந்தையை ஆட்டுச்சந்தை என்று அழைக்கும் அளவுக்கு பிரபலமாகும்.

கடந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்ட கொரோனா ஊரடங்கால் மார்ச் மாதம் 19-ந் தேதிக்குப் பிறகு பாப்பாரப்பட்டி வாரச்சந்தை கூட தடை விதிக்கப்பட்டது. கடந்த 27 வாரங்களாக சந்தை நடைபெறாத நிலையில் சமீபத்ல் தமிழக அரசு அறிவித்துள்ள தளர்வு காரணமாக நேற்று மீண்டும் பாப்பாரப்பட்டி வாரச்சந்தை கூடியது.

இருப்பினும் வாரச்சந்தை நடைபெறுமா? நடைபெறாதா? என்பது குறித்து பேரூராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்கூட்டியே அறிவிப்பு எதுவும் வெளியிடப்படாததால் வியாபாரிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் அதிகம் வருகை தரவில்லை. இதனால் வியாபாரிகள் மற்றும் கால்நடைகள் குறைந்த அளவில் கொண்டு வரப்பட்டு இருந்தன. எப்போதும் பரபரப்பாக காணப்படும் ஆட்டுச்சந்தை மற்றும் மாட்டுச்சந்தையில் வியாபாரம் நேற்று மந்தமாக காணப்பட்டது.

மேலும் செய்திகள்