சேலம் அருகே திருமணிமுத்தாற்றில் கலக்கும் சாயப்பட்டறை கழிவுநீர் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை

சேலம் திருமணிமுத்தாற்றில் சாயப்பட்டறை கழிவுநீர் கலக்கிறது, இதில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2020-10-02 05:17 GMT
சேலம்,

சேலம் மாவட்டம் ஏற்காடு அடிவாரத்தில் இருந்து சேலம் மாநகர் வழியாக உத்தமசோழபுரம் பகுதியில் திருமணிமுத்தாறு ஓடுகிறது.

கொண்டலாம்பட்டி, நெய்க்காரப்பட்டி, உத்தமசோழபுரம் பகுதியில் அதிகளவில் சாயப்பட்டறைகள் செயல்பட்டு வருகின்றன. இதில், சிலர் தங்களது சாயப்பட்டறை கழிவுநீரை திருமணிமுத்தாற்றில் அவ்வப்போது கலந்து விடுவதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதன் மீது மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அவ்வப்போது நடவடிக்கை எடுத்தாலும், மழை பெய்யும்போது சாயப்பட்டறை கழிவுநீரை திருமணிமுத்தாற்றில் திறந்து விடுகிற சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது.

சேலத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் திருமணிமுத்தாற்றில் தண்ணீர் வெள்ளம்போல் செல்வதை காணமுடிகிறது. இந்தநிலையில், சாயப்பட்டறை வைத்து நடத்தி வரும் சிலர் மீண்டும் சாய கழிவுகளை திருமணிமுத்தாற்றில் திறந்து விட்டுள்ளனர். இதன் காரணமாக நேற்று காலை சேலம் அருகே உத்தமசோழபுரம் பகுதியில் திருமணிமுத்தாற்றில் நுரையுடன் தண்ணீர் பாய்ந்து சென்றது.

இதனை கண்ட விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அவ்வப்போது கண்காணித்து சாய கழிவுநீரை ஆற்றில் கலப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்